Paristamil Navigation Paristamil advert login

கடல் ஆமைகளை உண்ணும் காசா மக்கள்….! பட்டினியில் வாடும் நிலை

கடல் ஆமைகளை உண்ணும் காசா மக்கள்….!     பட்டினியில் வாடும் நிலை

2 வைகாசி 2025 வெள்ளி 11:03 | பார்வைகள் : 289


இஸ்ரேலின் முற்றுகையால் காசாவில் பொதுமக்கள் பட்டினியில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரவாத தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.

மக்கள் வசிக்கும் வீடுகள் மட்டுமல்லாது, பள்ளிகளையும் குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் காசா நகரம் துயரத்தில் மூழ்கியுள்ளது.

இதன் விளைவாக, காசா மக்கள் அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

குறிப்பாக, உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் காசாவுக்குள் செல்ல முடியாதபடி இஸ்ரேல் விதித்துள்ள கடுமையான முற்றுகை, அங்குள்ள மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

இந்தக் கொடுமையான சூழ்நிலையில், காசாவில் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையான பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் விசாரணையின்போது, அமெரிக்க வெளியுறவுத்துறையின் சட்ட ஆலோசகர் ஜோசுவா சிம்மன்ஸ் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் (UNRWA) செயல்பாடுகளை காசாவில் தடை செய்ய இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறியிருப்பது, காசா மக்களுக்கு செல்லும் உதவிகளை மேலும் தடுக்க வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

UNRWA அமைப்பின் மனிதாபிமான உதவிகள் தடைப்பட்டதன் விளைவாக, காசாவில் இதுவரை ஊட்டச்சத்து குறைபாட்டால் 52 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் 50 பேர் பச்சிளம் குழந்தைகள் என்பது இதயத்தை உலுக்கும் செய்தியாகும்.

மேலும், தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் காசா மீனவர்கள் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது, அங்குள்ள பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துகிறது.

உணவுக்காக அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில், காசா மக்கள் தங்களது உயிரை தக்கவைத்துக் கொள்ள வேறு வழியின்றி கடலோரத்தில் ஒதுங்கும் கடல் ஆமைகளை உண்ணும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மீனவர் அப்துல் ஹலீம் கண்ணீருடன் கூறுகையில், "நான் ஒருபோதும் கடல் ஆமைகளை உண்ண வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவேன் என்று நினைத்ததில்லை.

வேறு வழியில்லாத காரணத்தினாலேயே நாங்கள் அவற்றை சாப்பிடுகிறோம்" என்று தனது வேதனையை பகிர்ந்துகொண்டார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்