10 கோடிக்கும் அதிகமான வீடியோக்கள்: யூடியூப்பில் இந்தியர்கள் சாதனை

2 வைகாசி 2025 வெள்ளி 17:18 | பார்வைகள் : 200
இந்தியாவில் யூடியூப் கிரியேட்டர்கள் ஆண்டுக்கு ₹21 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி வருவதாக யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பொழுதுபோக்குத் துறை கருத்தரங்கில், யூடியூப் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியைப் பற்றி யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் புகழாரம் சூட்டினார்.
உலகளாவிய ஆன்லைன் வீடியோ சந்தையில் இந்தியாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஒரே ஆண்டில் இந்தியாவில் இருந்து சுமார் 10 கோடிக்கும் அதிகமான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன என்று நீல் மோகன் தெரிவித்தார்.
இந்தச் சாதனை மூலம், இந்தியா உலகிலேயே அதிக வீடியோ உருவாக்கம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது.
மேலும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் ஒரு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளன.
இதன் மூலம், இந்தியா தற்போது கன்டென்ட் கிரியேட்டர்களின் கேந்திரமாக உருவெடுத்து வருகிறது என்பதை நீல் மோகன் திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
இந்திய கன்டென்ட் கிரியேட்டர்கள் உருவாக்கும் புதிய மற்றும் புதுமையான வீடியோக்கள் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்திய யூடியூப் சேனல்களின் உலகளாவிய வரவேற்புக்குச் சான்றாக, சர்வதேச பார்வையாளர்கள் இதுவரை 4,500 மணி நேரத்திற்கும் மேலாக இந்திய வீடியோக்களைப் பார்த்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய யூடியூப் கிரியேட்டர்கள் ₹21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருமானம் ஈட்டியுள்ளனர்.
இது இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியின் பொருளாதார வலிமையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த அபரிமிதமான வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், யூடியூப் இந்தியாவில் ₹850 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீடு, திறமையான வீடியோ உருவாக்குபவர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதோடு, அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நீல் மோகன் உறுதியளித்தார்.