Le Grand Rex - அசத்தல் சினிமா!!
23 ஆடி 2016 சனி 10:30 | பார்வைகள் : 19820
ஒரு திரைப்படம், அதன் முழு அனுபவத்தையும் திரையரங்கில் பார்த்தால் தான் கிடைக்கும். பெரிய திரை, துல்லியமான ஒலியமைப்பு என இருந்தால் தான் திரைப்பட அனுபவம் முழுமையாக கிடைக்கும்... ஆனால் பரிசில் அமைந்துள்ள Le Grand Rex திரையரங்கு... அதுக்கும் மேலான ஒரு அனுபவத்தை உங்களுக்கு தரும்!
ரெக்ஸ் திரையரங்கு தான் ஐரோப்பாவில் மிகப்பெரிய திரையரங்கு! Jacques Haïk எனும் சினிமா தயாரிப்பாளர் தான் இத்திரையரங்கை முதன் முதலாக உருவாக்கியவர். ரசிகர்களுக்கு திரைப்பட அனுபவம் 'சினிமாவில் பாதி திரையரங்கில் மீதி' எனும் எண்ணத்தில் உருவாக்கினாராம்.
25 மீட்டர் நீளம் உள்ள மிகப்பெரிய திரையில், முதன் முதலாக சார்லி சாப்ளின் திரைப்படங்கள் ஓடியதாம். இத்திரையே பரிசின் மிகபெரிய திரையை கொண்ட திரையரங்காகும்.
டிசம்பர் 8, 1931 ஆண்டு திறந்து வைக்கப்பட்ட திரையரங்கில், அமெரிக்க திரைப்படங்கள் தான் அதிகளவு திரையிடப்படுகின்றன. குறிப்பாக வால்ட் டிஸ்னியின் திரைப்படங்கள் அனைத்தும் தவறாமல் இங்கு திரையிடப்படும்!
இங்கு ஒவ்வொரு வருட ஏப்ரலிலும் Jules Verne Adventure எனும் திரைப்பட திருவிழா இடம்பெறும். ஆறு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் குறைந்தது 48,000 பேர் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை எந்த இந்திய திரைப்படத்தையும் திரையிடாத ரெக்ஸ் திரையரங்கு, நேற்று முன் தினம் முதன் முறையாக சூப்பர் ஸ்டாரின் 'கபாலி' திரைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள்.
1 Boulevard Poissonnière, 75002 Paris, France எனும் முகவரியில் அமைந்துள்ளது திரையரங்கு. திரையரங்கில் புது அனுபவத்தை பெற அவசியம் சென்று வாருங்களேன்