பிரித்தானியாவில் பயங்கரவாத திட்டம்- 4 ஈரானியர்கள் உட்பட 5 பேர் கைது!

4 வைகாசி 2025 ஞாயிறு 10:46 | பார்வைகள் : 198
பிரித்தானியாவில் பயங்கரவாத சதி திட்டத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் ஒரு குறிப்பிட்ட இலக்கை குறிவைத்து நடத்தப்படவிருந்த பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய பயங்கரவாத தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் நான்கு ஈரானியர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைதுகள் நேற்று சனிக்கிழமை ஸ்விண்டன், மேற்கு லண்டன், ஸ்டாக் போர்டு, ரோச்டேல் மற்றும் மான்செஸ்டர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றன.
சந்தேக நபர்கள் பயங்கரவாத குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பெருநகர பொலிஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சதித்திட்டம் குறித்த மேலதிக விவரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
இது தற்போதைய விசாரணையின் ஒரு பகுதியாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மேற்கொள்ளப்படுகிறது.
லண்டனில் உள்ள ஈரான் தூதரகம் இந்த கைதுகள் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதிலையும் அளிக்கவில்லை.