Paristamil Navigation Paristamil advert login

'சிகரம் தொட்ட மனிதர்கள் !' - Alexandre Gustave Eiffel!!

'சிகரம் தொட்ட மனிதர்கள் !' - Alexandre Gustave Eiffel!!

18 ஆடி 2016 திங்கள் 10:30 | பார்வைகள் : 17835


'சிகரம்' தொட்ட மனிதர்கள் என்ற தலைப்புக்கு மிக சரியாக பொருந்துபவர் நம் Gustave Eiffel. ஈஃபிள் கோபுரத்தை இவர் தான் வடிவமைத்து கட்டி முடித்தார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே!! ஆனால்... இவர் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது!
 
Alexandre-Gustave Eiffel என்பது இவரின் முழு பெயர். டிசம்பர் 15, 1832 ஆம் ஆண்டு பிரான்சின் Dijon நகரில் பிறந்தார். சிறுவயதிலேயே கட்டிடங்கள் மேல் ஆர்வம் இருந்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறு வயது படிப்பை முடித்துக்கொண்டு மேற்படிப்புக்காக École Centrale des Arts et Manufactures கல்லூரியில் சேர்ந்து 'இஞ்சினியர்' ஆகிறார். 
 
இஞ்சினியர் ஆனதும் எதாவது வேலை செய்யவேண்டுமே... ? அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு போர்த்துக்கல்லில் ஒரு சிறிய பாலம் கட்டுகிறார். நகரை ஊடறுத்து செல்லும் ஆற்றை கடக்க ஒரு இரும்பு பாலம். இரும்பை கொண்டு மிக நேர்த்தியாக அந்த பாலத்தை வடிவமைத்தார். பாலத்தில் நடக்கும் போதெல்லாம் மக்கள் பாதுகாப்பாய் உணர்ந்தனர். 
 
ஆனால் ஈஃபிளின் கனவு அதுவல்ல! பெருசா ஏதேனும் சாதிக்கனும். வாய்ப்புக்காக காத்திருந்தார். ஆனால் அவர் வீட்டு கதவை தட்டிய அடுத்த வாய்ப்பு, 'சார்.. ஒரு மேம்பாலம் கட்டணும்!' என்பதாகும்! என்னடா இது வம்பாய் போய்விட்டது என பிரான்சின் Truyère நகரில் தன் அடுத்த மேம்பாலத்துக்கான பணிகளை ஆரம்பித்தார். இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஏதேனும் 'பெருசா' சாதிக்கனும் என்ற முனைப்பில் இருந்தவர், இந்த மேம்பால பணியை கையில் எடுத்ததுக்கு காரணம் உண்டு. அந்த பாலம் 400 அடி நீளமுடைய உலகின் மிகப்பெரிய பாலம் (கட்டப்பட்ட போது, இப்போதல்ல!!) அதுவாக இருந்தது. இந்த ஒரு காரணமே ஈஃபிளை மேம்பாலம் கட்ட தூண்டியது. 
 
அந்த மேம்பாலத்தோடு ஒரேயடியாய் 'மேம்பாலம்' கட்டும் வேலைகளுக்கு முழுக்கு போட்டார் ஈஃபிள்! 'நம்ம லெவல் இது இல்லையே!' என மிக பெரிதான கொள்கை வைத்திருந்தவருக்கு, சினிமா படங்களில் வருவது போல்... ஒரு துண்டு பிரசுரம் பறந்து வந்து அவர் முகத்தில் ஒட்டியது. 'உலக வர்த்தக கண்காட்சி பரிசில் இடம்பெறுகிறது' என சொல்லியது அந்த துண்டு பிரசுரம். 'அடடா அப்பிடி போடு!' என ஆரவாரமான ஈஃபிள்... பிரத்யேகமான ஒரு கட்டிடத்தை வடிவமைக்க முனைகிறார். 'ஈஃபிள் கோபுரம்' பிறக்கிறது. 
 
1887 ஆம் ஆண்டு, 12 ஆயிரம் இரும்பு துண்டு, 25 லட்சம் 'ரிவேர்ட்ஸ்' கொண்டு ஈஃபிள் கோபுரம் கட்டும் பணி ஆரம்பித்தது. ஈஃபிளின் திறமை அபாரமானது. அவரின் சிந்தனைகள்
விசாலமானது.பாரம் தாங்குவதற்குரிய வகையில் கால்களை வளைத்தும், அதிவேகமாக காற்று அடித்தால் வளைந்து கொடுப்பதற்கு ஏற்றவாறும் ஈபிள் கோபுரம் கட்டப்பட்டது. அதுவே பின்நாட்களில் 'உலகின் மிக உயர கோபுரம்' என்றும்... உலக அதிசயம் என்றும் கொண்டாடப்பட்டது.
 
உலக வர்த்தக கண்காட்சியில் பலரால் பார்வையிடப்பட்டது ஈஃபிள் கோபுரம் தான். வர்த்தக கண்காட்சி இடம்பெற்ற தடம் இல்லாமல் மாறிவிட்டது.. ஆனால் ஈஃபிள் கோபுரம் இன்னமும் கம்பீரமாய் நின்றிருக்கிறது. 
 
அது எப்படி காற்று வீசும் போது கோபுரம் வளைந்து கொடுக்கிறது?! என பெரும் ஆச்சரியம்... 'காற்றியக்கவியல்' தொடர்பான புத்தகங்கள் சிலவற்ற எழுதுகிறார். வாழ்நாளின் இறுதி பகுதிகளை வாழ்ந்துகொண்டிருக்கும் ஈஃபிளுக்கு, இன்னும் பெரிதாக ஏதேனும் சாதிக்கணும் என ஆர்வம். அதற்காகவே meteorology எனும் வானிலை ஆய்வு குறித்து படிக்கிறார். ஆனால் அதற்கும் அவரை மரணம் முத்தமிட்டுக்கொண்டது. (டிசம்பர் 27, 1923) யார் கண்டார்.. ஈஃபிள் கோபுரத்தை விட ஏதேனும் பெரிதாய் ஒரு கனவு வைத்திருந்திருப்பார் Alexandre Gustave Eiffel!!
 
"வாழ்க்கையில் எப்போதும் 'THINK BIG'" என்ற தாரக மந்திரம் தான் அவரை சிகரம் தொட்ட மனிதராக்கியிருக்கிறது!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்