Paristamil Navigation Paristamil advert login

புராண கதாபாத்திரம் ராமர் : ராகுல் பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்

புராண கதாபாத்திரம் ராமர் : ராகுல் பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்

5 வைகாசி 2025 திங்கள் 09:25 | பார்வைகள் : 143


காங்கிரஸ் எம்.பி., ராகுல், அமெரிக்காவில் பேசும்போது, 'ராமர் புராண கதாபாத்திரம்' என கூறிய கருத்துக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் வெளிநாடு செல்லும்போதெல்லாம், ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கமாகி வருகிறது.

இரு வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற ராகுல், பிரவுன் பல்கலையில் பேசியதாவது:

இந்தியாவின் மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல் சிந்தனையாளர்களாக விளங்கிய புத்தர், குருநானக், கர்நாடகாவின் பசாவா, கேரளாவின் நாராயண குரு, ஜோதிராவ் புலே, மஹாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் மதவெறி பிடித்தவர்கள் அல்ல.

அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்றே அவர்கள் போதித்தனர்.

ராமர் போன்ற புராண கதாபாத்திரங்களும் அதை தான் போதித்தன. அவர் மன்னிப்பவராக, இரக்கம் உள்ளவராக இருந்தார்.

ஆனால் பா.ஜ.,வின் கருத்தை ஹிந்து கருத்தாக நான் பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

ராமரை புராண கதாபாத்திரம் என்று ராகுல் கூறியதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஹிந்துக்களையும், ராமரையும் அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக மாறிவிட்டது.

'ராமர் கோவில் கட்டுவதை எதிர்த்த அவர்கள், பாகிஸ்தானின் மொழியையே வெளிப்படுத்துகின்றனர். ராமருக்கும், ஹிந்துக்களுக்கும் எதிரான இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' என, குறிப்பிட்டுள்ளார்.

'தவறுகள் செய்துள்ளோம்'

அமெரிக்காவின் பிரவுன் பல்கலையில் ராகுல் பேசும்போது, 'கடந்த, 1984ல் நடந்த சீக்கிய படுகொலை பற்றியும், அதை நிகழ்த்தியவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த ராகுல், 'சீக்கியர் கலவரத்தில் காங்., பல தவறுகள் செய்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதை நான் நேரில் காணவில்லை. ஆனாலும், காங்கிரஸ் கட்சி தன் வரலாற்றில் செய்த தவறுகள் அனைத்திற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்' என்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்