பஹல்காம் தோல்வியை மறைக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு ! காங்கிரஸ்

5 வைகாசி 2025 திங்கள் 10:27 | பார்வைகள் : 139
பஹல்காம் சம்பவத்தில் ஏற்பட்ட தோல்வியை மூடி மறைக்கவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக, சென்னையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டது.
தமிழக காங்கிரஸ் சார்பில், 'அரசியலமைப்பை காப்பாற்றுவோம்' என்ற பெயரிலான அரசியல் மாநாடு, சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் மைதானத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். பொருளாளர் ரூபி மனோகரன் வரவேற்றார்.
மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அனைவருக்கும், அரசியலமைப்பு சட்டப் புத்தகங்களை, செல்வப்பெருந்தகை வழங்கினார். அனைவரும் அப்புத்தகத்தை கையில் ஏந்தி, உறுதிமொழி ஏற்றனர். 'காத்திடுவோம் காத்திடுவோம், அரசியலமைப்பு சட்டத்தை காத்திடுவோம்' என்று, கோஷம் எழுப்பினர்.
பின்னர், முன்னாள் மாநில தலைவர்கள், தேசிய பொறுப்பாளர்கள் பேசினர்.
அதன் விபரம்:
முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ்: மன்மோகன்சிங் ஆட்சியில், மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் நடந்த போது, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்தார்.
பஹல்காமில் நடந்த பயங்கராவாதிகள் தாக்குதலுக்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் பதவி விலகவில்லை? பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தங்கள் இருப்பிடத்தை காலி செய்யும் முன், அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் செயலர் செல்லக்குமார்: பஹல்காமில் நடந்த கொடூர சம்பவத்தில், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்தின் தோல்வியை மூடி மறைக்கவும், திசை திருப்புவதற்கும், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெறும் நாடகம்.
முன்னாள் எம்.பி., - கே.எஸ்.அழகிரி: இந்தியாவை மதம், ஜாதி என்ற அடிப்படையில் பிரிக்க நினைக்கின்றனர். அதற்கு காங்கிரஸ் இடம் கொடுக்காது. அரசியல் சட்டத்தை, காங்கிரஸ் பாதுகாக்கும்.
முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமி: காமராஜர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என, 60 ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். அதற்கு நேரம் நெருங்கி வருகிறது. தொண்டர்கள் மனது வைத்தால், அது நடக்கும்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதை செயல்படுத்த வேண்டும். செல்வப்பெருந்தகைக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்கிறது; அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறது. நாடு முழுதும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, காங்கிரஸ் கட்சி வீறு கொண்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை, இந்திய அரசியல் சட்டம் காப்பாற்றப்படும். காங்கிரஸ் வாழ்ந்தால் இந்தியா வாழும்.
பா.ஜ., ஆட்சியில் அரசியலமைப்பு சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதை காங்கிரஸ் கட்சி தடுத்தாக வேண்டும். அதற்காக, அனைவரும் ஒருங்கிணைந்து போராடுவோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: அரசியலமைப்பு சட்டத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும்; காமராஜரின் சொத்துக்களையும், நாம் பாதுகாக்க வேண்டும். தொண்டர்கள் இல்லாமல் காங்கிரஸ் இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், நுாறு நாட்கள் வேலை திட்டம் என, மக்களுக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், பிரதமர் மோடி ஆட்சி திட்டங்கள் எல்லாம் அம்பானிக்கும், அதானிக்கும் தான் கொண்டு வரப்பட்டுள்ளன.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என, பிரதமர் மோடி ஏன் சொல்கிறார். சீனாவில் அதிபர் ஆட்சி நடக்கிறது. ஜெர்மனில் ஹிட்லர் ஆட்சி நடத்தியது போல, அதிபர் ஆட்சி நடத்த பிரதமர் மோடி விரும்புகிறார்.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்: அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும்.
கோவா மாநிலத்தில் செல்லக்குமார் பொறுப்பாளராக இருந்த போது, அம்மாநிலத்தின் கவர்னரை வைத்து, காங்கிரஸ் ஆட்சியை பா.ஜ.,வினர் அபகரித்தனர்.
தமிழகத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளால், 'ரெய்டு' நடத்தப்பட்டது. ஆனால், பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் ரெய்டு நடத்தவில்லை. அம்மாநிலத்தில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடப்பது தான் காரணம்.
ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி, மத்தியில் விரைவில் அமையும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
சிதம்பரம் வராதது ஏன்?
* மாநாடு துவங்கிய போது, மழை பெய்தது. ஆனாலும், தொண்டர்கள் எழுந்து செல்லாமல் அமர்ந்திருந்தனர்
* முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என, அறிவிக்கப்பட்டிருந்தது. திருச்சியில் இருந்து சென்னைக்கு, நேற்று மாலையில் அவர் வந்த விமானம், மழை காரணமாக தாமதமானாதால், அவரால் வர இயலவில்லை
* கடந்த, 30 ஆண்டுகளுக்கு பின், காமராஜர் மைதானத்தில் மாநாடு நடந்ததால், அனைத்து மாவட்டங்களில் இருந்தும், நிறைய வாகனங்களில் ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர்.