இன்று கூடுகிறது ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ; இந்தியா - பாக்., விவகாரம் குறித்து ஆலோசனை

5 வைகாசி 2025 திங்கள் 12:29 | பார்வைகள் : 151
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பின்னணி கொண்ட பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொன்றனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான உறவை முற்றிலுமாக துண்டித்தது இந்தியா.
குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான இந்த சூழலை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், இருநாடுகளும் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கை மற்றும் சிந்துநதி ஒப்பந்தம் ரத்து உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக, ஐ.நா., சபைக்கான கிரேக்கத்தின் நிரந்தர பிரதிநிதியும், மே மாதத்திற்கான பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமான எவாஞ்சலோஸ் செகெரிஸ் கூறுகையில், 'அனைத்து கோணங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம். அதேவேளையில், அதிகரித்து வரும் பதற்றமான சூழல் கவலையளிக்கிறது,' என்றார்.