கடிதம் தவிர ஸ்டாலினின் மாற்று திட்டம் என்ன: சீமான்

5 வைகாசி 2025 திங்கள் 14:31 | பார்வைகள் : 163
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே, நடுக்கடலில் மீன்பிடித்த மீனவர்கள் மீது, இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவர்களின் உடைமைகளைப் பறித்துள்ளனர். தமிழக மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்காத மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொடர் அலட்சியப்போக்கு கண்டனத்துக்குரியது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை தாண்டி, இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியவுடன் பதறி துடித்த மக்கள், தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு, எந்த பதற்றமும் கொள்ளாமல் கள்ள அமைதி காப்பது ஏன்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லையா?
உயிரிழப்புகள் நிகழ்ந்தால் தான் அதுபற்றி பேசுவீர்களா அல்லது கோபமும் இரக்கமும் கூட, எந்த நாடு தாக்கியது, தாக்கப்பட்ட மக்கள் யார் என்பதெல்லாம் பார்த்துதான் வருமா?
வழக்கம்போல் இன்னொரு கடிதம் எழுதுவதை தவிர, தமிழ் மீனவர்களைக் காக்க, ஸ்டாலினிடம் மாற்று திட்டம் ஏதாவது உண்டா?
தமிழர் நிலத்தை, ஐந்து முறை தி.மு.க., ஆண்ட பின்னும், தமிழ் மீனவர் சிக்கல் தீர்க்கப்படவில்லை. பின், கச்சத்தீவை மீட்கும் நாடகம் எதற்கு; 2026 தேர்தலுக்கா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.