கொழும்பில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி - விசாரணைகள் ஆரம்பம்

5 வைகாசி 2025 திங்கள் 15:39 | பார்வைகள் : 166
கொழும்பு – கொட்டாஞ்சேனை தொடர்மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில், தரம் 11இல் கல்வி கற்று வந்த குறித்த தமிழ் மாணவி, மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவரது மரணத்துக்கு ஆசிரியர் ஒருவர் மீது குற்றம் சுமத்தி சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை உத்தியோகபூர்வமான பதில் எதனையும் இதுவரையும் வழங்கவில்லை.
குறித்த மாணவியின் மரணத்துக்கு, உரிய பதில் வழங்குமாறு பதில் காவல்துறை மா அதிபரிடம் எழுத்துமூலம் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.