சீனாவில் திடீர் சூறாவளி - 10 பேர் பலி!

5 வைகாசி 2025 திங்கள் 18:39 | பார்வைகள் : 151
தென்மேற்கு சீனாவில் ஞாயிற்றுக்கிழமை (4) பிற்பகல் திடீரென வீசிய சூறாவளியால் ஆற்றில் பயணித்துக்கொண்டிருந்த 4 சுற்றுலாப்படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததோடு, 70க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் குசோயு மாகாணத்தில் உள்ள யாங்சி நதியின் துணை நதியான 'வு' (Wu) ஆற்றில் நேற்று நான்கு படகுகள் மூழ்கி விபத்துக்குள்ளானபோது அப்படகுகளில் இருந்த 80க்கு மேற்பட்டோர் நீரில் விழுந்துள்ளனர்.
நீரில் விழுந்தவர்களில் 10 பேர் உயிரிழந்ததாகவும் ஏனையவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மீட்புப் பணிகளுக்காக குய்சோ மாகாண தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், 84 வாகனங்கள், 83 சுழியோடிகள் உட்பட 248 பேர் பணியாளர்கள், நீருக்கடியில் தேடலில் ஈடுபடக்கூடிய 16 ரோபோக்கள், 24 படகுகள் அடங்கிய எட்டு மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஆற்றின் மேற்பரப்பில் ஆலங்கட்டி மழையுடனான பெரும் புயல் தாக்கியதாலேயே படகுகள் கவிழ்ந்ததாகவும் நான்கில் ஒரு படகு தலைகீழாக மூழ்கியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.