Paristamil Navigation Paristamil advert login

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

6 வைகாசி 2025 செவ்வாய் 12:12 | பார்வைகள் : 149


கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பில் பெற்றோர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொட்டாஞ்சேனை – கல்பொத்த வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பிலிருந்து விழுந்து, கடந்த 29 ஆம் திகதி 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்தநிலையில், நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த அவரது பெற்றோர் தங்களது மகளின் மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் இன்றைய தினம், உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

அதன்போது, குறித்த அதிகாரிகளுடன் இடம்பெற்ற உரையாடலின்போது, குறித்த தரப்பினர் தொடர்பான தகவல்களை உயிரிழந்த மாணவியின் பெற்றோர் வெளிப்படுத்தியிருந்தனர்.

அதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி, கொட்டாஞ்சேனையில் உள்ள பிரபல கல்வி நிறுவகம் ஒன்றில் வைத்து அதன் உரிமையாளரால் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்டமையே தமது மகளின் மரணத்துக்கான பிரதான காரணம் என, மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

குறித்த நபர் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் எனவும், அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் தமது கல்வி நிறுவகத்தில் வைத்து, தமது மகளிடம், காவல்துறை முறைப்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளமையினால் இனி இங்கே கல்வி கற்ற வரவேண்டாம் என எச்சரித்திருந்ததாகவும், அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து, தமக்கு உயிர் வாழ்வதற்கு விருப்பமில்லை என தமது மகள் பல தடவைகள் தம்மிடம் கூறியதாகவும், உயிரிழந்த மாணவியின் தாய் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

‘இங்கும் பல ஆசிரியர்கள் உள்ளனர், உன்னால் அவர்களுக்குச் சிக்கல் ஏற்படலாம் நீ இங்கு வருவதைத் தவிர்த்துக்கொள்’ என கூறியமையினால் தமது மகள் மிகவும் உள ரீதியாக அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், தமது மகளை பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி அவரை உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளிய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என, குறித்த மாணவியின் தாயார் வலியுறுத்தியுள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்