கிரிப்டோநாணய முதலீட்டாளர்களுக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்புக்காக தனித்தீவுக்கு இடம்பெயர்வு!

6 வைகாசி 2025 செவ்வாய் 14:02 | பார்வைகள் : 501
கிரிப்டோநாணய (la cryptomonnaie) முதலீட்டாளர்கள் குற்றவாளிகளின் புதிய இலக்குகளாக மாறியுள்ளனர். மே 1 ஆம் திகதி, ஒரு கிரிப்டோ நிறுவன மேலாளரின் தந்தை கடத்தப்பட்டு, அவரின் விரல் துண்டிக்கப்பட்டு, பெரும் தொகை கோரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது போல, Ledger நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் அவரது மனைவியும் ஜனவரியில் கடத்தலுக்கு ஆளாகியிருந்தனர். இந்த தாக்குதல்களால் கிரிப்டோ தொழில்நுட்பத்தில் சம்பாதிப்பவர்கள் தங்களது பாதுகாப்பை அதிகரிக்க ஆரம்பித்துள்ளனர்.
பாதுகாப்புக்காக சிலர் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக தனித்தீவுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். கிரிப்டோவின் மூலம் விரைவில் செல்வம் சேர்க்கும் இவர்கள், பெரும் செல்வந்தர்களை விட பாதுகாப்பற்றவர்களாகவே காணப்படுகிறார்கள்.
தனியாக வாழ்தல், எச்சரிக்கையாக இருத்தல் மற்றும் பாதுகாப்பு பயிற்சிகள் மூலம்தான், தற்போது அவர்கள் தங்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.
"ஐரோப்பிய அளவில் சில முக்கிய அரசியல் தலைவர்கள், இது கிரிப்டோநாணயங்கள் வைத்திருப்பவர்களின் தவறு" என கூறியுள்ளார்கள். இது போன்ற சில பிரமுகர்களின் பொறுப்பற்ற விமர்சனமும், அரசியல் ஆதரவு இல்லாமையும், இந்த நிலையை மேலும் மோசமாக்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.