ஆபரேஷன் சிந்துார் குறித்து இந்திய ராணுவம் சொன்ன 10 முக்கிய விஷயங்கள் இவை தான்!

7 வைகாசி 2025 புதன் 15:27 | பார்வைகள் : 208
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வகையில், பயங்கரவாதிகள் அஜ்மல் கசாப், டேவிட் ஹெட்லி ஆகியோரின் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். அவர் கூறிய 10 முக்கியமான விஷயங்கள் பின்வருமாறு:
1. பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளின் ஒன்பது முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப் பட்டன.
2. தாக்குதலுக்கு தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய துல்லியமாக தாக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பொதுமக்கள் உயிர் இழப்பை தடுக்கும் வகையில் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது.
3.பாகிஸ்தான் ராணுவ தளங்களைத் தவிர்த்து, பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதை நோக்கமாகக் கொண்டு, அவர்களின் இருப்பிடங்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
4. பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட வரைபடங்கள் மற்றும் வீடியோக்களை ஆதாரமாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
5. பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த முகாம்களை அடையாளம் கண்டு, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
6.லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்குச் சொந்தமான தலைமையகங்கள் குறிவைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
7. பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளுடன் உறுதியான தொடர்புகளை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
8.சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. நிதி உதவி செய்து பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு உறுதுணையாக இருக்கிறது.
9. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் கொடூரமானது. இது பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது
10.எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் உடனடியாக நிகழும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இது திருப்பி பதிலடி கொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.