யாரென்று தெரிகிறதா?! - இவன் தீ என்று புரிகிறதா?
8 ஆடி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18794
இன்று அபார வெற்றியுடன் சந்தித்திருக்கின்றோம். ஜெர்மனியை எதிர்ப்பது என்பது அத்தனை ஈஸியான வேலை இல்லை. ஜெர்மனி உலக சாம்பியன். 2-0 எனும் செட் கணக்கில் ஆபரமாக வெற்றி பெற்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கும் இறுதிப்போட்டியில், போர்த்துக்கல்லுடன் மோத இருக்கிறது பிரான்ஸ் அணி!!
இந்த வருடத்து போட்டிகளில் இருந்து....
பிரான்ஸ் அணி இதுவரை நடந்த எந்த போட்டிகளின் போதும் தோல்வி அடையவில்லை. மொத்தமாக இடம்பெற்ற 6 போட்டிகளின் போது, 5 அபார வெற்றியும்... 1 Drawவும் பெற்றிருக்கிறது. தோல்விகள் இல்லவே இல்லை!
இந்த வருடத்து போட்டிகளில், முதல் போட்டி ( ஜூன் - 10 ) பிரான்சுக்கும் ருமேனியாவுக்கும் இடையில் இடம்பெற்றது. முதல் போட்டியிலேயே 2-1 என வெற்றி பெற்று தன் வெற்றிச் சரித்திரத்தை ஆரம்பித்து வைத்தது.
அதை தொடர்ந்து ஜூன் 15 அல்பேனியாவை சந்தித்திருந்தது. 2 - 1 என வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து ஜூன் 19 சுவிட்சர்லாந்தையும், 25 அயர்லாந்தையும், ஜூலை 3 ஐஸ்லாந்தையும் சந்தித்தது.
அதை தொடர்ந்து நேற்று 7ம் திகதி மார்செய் நகரின் Stade Vélodrome மைதானத்தில் ஜெர்மனியுடன் விளையாடி 2-0 கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது.
ஜூன் 10ம் திகதி Saint-Denis இல் உள்ள Stade de France மைதானத்தில் ஆரம்பித்த இந்த வருடத்து போட்டிகள், ஜூலை 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதே Stade de France மைதானத்தில் முடிவுக்கு வருகிறது.
(Stade de France மைதானம் ஒரே நேரத்தில் 80,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய மிகப்பெரிய மைதானம் என்பது கொசுறு செய்தி)
போர்த்துக்கல் அணியை அவ்வளவு இலகுவாக கணிக்க முடியாது. நேற்று முன்தினம் 6ம் திகதி, வேல்ஸ் அணியை 2-0 எனும் செட் கணக்கில் அடித்து துவம்சம் செய்துவிட்டுத்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.
இறுதிப்போட்டியில் வெற்றி யார்பக்கம் இருந்தாலும்... மிக பலமான அனல் பறக்கும் போட்டி ஒன்றினை நாம் காண தயாராவோம்!!