புதிய பாப்பரசரை தெரிவு செய்ய கர்தினால்கள் ஒன்று கூடல்

7 வைகாசி 2025 புதன் 19:56 | பார்வைகள் : 412
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் மாநாட்டில் கர்தினால்கள் ஒன்று கூடியுள்ளார்கள்.
வத்திக்கானில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய ஆலோசனை மாநாடும், வாக்கெடுப்பும் இன்று புதன்கிழமை (07) நடைபெறுகின்றது.
இந்நிலையில், வத்திக்கானில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்படவுள்ளது.
சிஸ்டைன் தேவாலயத்திற்கு உள்ளேயும் வெளி பகுதியிலும் தொலைபேசி மற்றும் இணைய சிக்னல்களை தவிர்க்க ஜாமர்கள் பொருத்தப்பட்டிருக்கும். கர்தினால்கள் தங்கும் மாளிகையிலும் தொலைக்காட்சி, வானொலி, செய்திதாள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்படுபவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடை பெறும். ஒவ்வொரு கர்தினால் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள்.
மூன்று நாட்களுக்கு பின்னரும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை என்றால் வாக்காளர்களான கர்தினால்கள் சிந்திக்க நேரம் ஒதுக்குவதற்காக வாக்குப்பதிவு 24 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.
1831 ஆம் ஆண்டு முதல் எந்தவொரு மாநாடும் நான்கு நாட்களுக்கு மேல் நீடித்ததில்லை.
பாப்பரசர் தெரிவு செய்யப்படும் செயல்முறை நடக்கும்போது சிஸ்டைன் தேவாலயத்தில் வெளியாட்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது.
கர்தினால்களின் வாக்குச் சீட்டுகளை எரிக்கும்போது வெளியாகும் இரு புகைகளை வைத்தே போப் தெரிவு செய்யப்படும் செயல்முறை குறித்து மக்களால் தெரிந்து கொள்ள முடியும்.
அதாவது கருப்பு நிறத்தில் புகை வந்தால் பாப்பரசர் தெரிவு செய்யப்படும் செயல்முறை இன்னும் முடியவில்லை என அர்த்தம். வெள்ளை புகை என்பது புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டதை குறிக்கிறது.