Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்

பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்

8 வைகாசி 2025 வியாழன் 14:27 | பார்வைகள் : 601


இந்தியாவின் பல நகரங்களில் ஏவுகணை மற்றும் டுரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது,'' என இந்திய ராணுவம் கூறியுள்ளது. மேலும், லாகூரில் வான் பாதுகாப்பு கவச வாகனத்தையும் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பதிலடி

பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, அதற்கு பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.

உறுதி

இந்நிலையில், இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அந்நாட்டின் ராணுவ தளங்கள் குறிவைக்கப்படவில்லை என தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு உரிய பதிலடி அளிக்கப்படும் எனவும் உறுதியாக தெரிவித்தோம்.


முறியடிப்பு

ஆனால் மே 07 மற்றும் 08 ஆகிய இரவுகளில் அவந்திபோரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதன்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர்,லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல்,பலோடி, உத்தர்லாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாபகுதிகளில் பாகிஸ்தான் டுரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இவை அனைத்தும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், பல இடங்களில் சிதறி கிடக்கும் அதன் உதிரி பாகங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இந்த பாகிஸ்தானின் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது.

லாகூரில்

இன்று காலை பாகிஸ்தானின் பல இடங்களில் உள்ள வான் பாதுகாப்பு ரேடர்கள் மற்றும் அமைப்புகள் மீது இந்திய ஆயுதப்படைகள் தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானை போல், அதே வேகத்தில் இந்தியாபதிலடி கொடுத்தது. இதில், லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

கட்டாயம்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா , பாரமுல்லா, உரி,பூஞ்ச், மெந்தார் மற்றும் ரஜோரி செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பீரங்கிகள் மற்றும் மோர்ட்டர் மூலம் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 3 பெண்கள், 5 குழந்தைகள் உள்ளிட்ட 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். இதனால், இங்கும், பாகிஸ்தானின் தாக்குதலை நிறுத்த இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் இந்திய ராணுவம் கூறியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்