பாக்., தாக்கினால் பதிலடி நிச்சயம்: ஜெய்சங்கர் உறுதி

8 வைகாசி 2025 வியாழன் 16:27 | பார்வைகள் : 613
பதற்றத்தை அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது. ஆனால், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அதற்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்பதில் சந்தேகமே தேவையில்லை,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியா - ஈரான் இடையிலான 20வது கூட்டு குழு கூட்டத்தில் பங்கேற்க ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி டில்லி வந்துள்ளார். 2024 ல் ஈரான் வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் இந்தியா வருவது இது முதல்முறையாகும்.
டில்லியில் அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் கடந்த 22 ம் தேதி நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கப்பட்ட காலத்தில் நீங்கள் இந்தியா வந்துள்ளீர்கள். இந்த தாக்குதல் காரணமாக, நேற்று எல்லை தாண்டிய பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எங்களது பதிலடி நடவடிக்கை குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்தும் கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டது. பதற்றத்தை அதிகரிக்கும் சூழல் எங்களது நோக்கம் கிடையாது. அதேநேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு உறுதியான பதிலடி வழங்கப்படும் என்பதில் சந்தேகமும் இல்லை. அண்டை நாடு மற்றும் நெருங்கிய உறவினர் என்பதில் சூழ்நிலையை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.