தாக்குதல் நடத்த பாக்., மீண்டும் முயற்சி: வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா

8 வைகாசி 2025 வியாழன் 20:30 | பார்வைகள் : 180
பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் காஷ்மீரில் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. தற்கொலை ட்ரோன்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால், நிலைகுலைந்து போயுள்ள பாகிஸ்தான் பதிலடி கொடுக்க போவதாக கூறியது. நேற்று 15 இந்திய நகரங்களை நோக்கி பாக்., ராணுவம் வீசிய ஏவுகணைகளை நமது ராணுவம் இடைமறித்து அழித்தது.
இந்நிலையில், இன்று இரவு பாகிஸ்தான் ராணுவம் தற்கொலை டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயற்சித்தது. குறிப்பாக ஜம்மு விமான நிலையம், சுஞ்சுவன் ராணுவ தளம்ல சம்பா தேசிய நெடுஞ்சாலை, ஆர்னியா ராணுவ தளம் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக அபாயத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஏர் சைரன் ஒலிக்கவிடப்பட்டது. அக்னூர் பகுதியில் சைரன் சத்தம் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரின் உதம்பூர் மற்றும் அக்னூர் பகுதியிலும் பாகிஸ்தானின் டுரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
உடனடியாக எஸ் 400 மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் மூலம் பாக்., தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. ஜம்மு.ஆர்எஸ்போரா உள்ளிட்ட 3 இடங்களில் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. ஆறு இடங்களில் வெடிச்சத்தம் கேட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இரவு முழுவதும் மின்சாரத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.
ராஜஸ்தானிலும்
இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலும் பாக்., ராணுவம் டுரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. உடனடியாக இந்திய வான் பாதுகாப்பு கவசம் அதனை வழிமறித்து தாக்கி அழித்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.