இஸ்ரேலுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்

21 ஆனி 2025 சனி 06:31 | பார்வைகள் : 303
இஸ்ரேல் - ஈரான் மோதம் 9வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் இராணுவ பலத்தை குறைத்து மதிப்பிட்டனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இஸ்ரேலும் ஈரானும் தொடர்ந்து 9-வது நாளாகப் போரில் ஈடுபட்ட நிலையில், தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள ஒரு தொழில்துறை பகுதியில் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது, இது நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.
மறுபுறம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்குவது சந்தேகமே என்பதை சூசகமாக தெரிவித்தார். மேலும், ஈரானை தாக்குவதா இல்லையா என்பதை அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிபதி முடிவு செய்வார் என்று வெள்ளை மாளிகை தரப்பு கூறியது.
ஈரான் முன்னெடுக்கும் உக்கிரத் தாக்குதல்களால், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் சக்தியை குறைத்து மதிப்பிட்டனவா என்ற கேள்வியும் தற்போது எழுகிறது. ஈரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பார்க்கும்போது, இஸ்ரேலும் கூட அதையே உணர்ந்திருக்க வேண்டும்.
உண்மையில் காஸா மீதும், தற்போது தெஹ்ரான் மீதும் இஸ்ரேல் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்கா அளித்தவையே. போரின் தொடக்கத்தில், ஈரான் மீது பெரிய தாக்குதல்களில் இஸ்ரேல் முன்னணியில் இருந்தது. இருப்பினும், ஈரான் தொடர்ந்து இஸ்ரேலைத் தாக்கி, பரவலான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்று அதிகாலை, ஈரான் மீண்டும் இஸ்ரேலின் பெரிய நகரங்களான டெல் அவியா, ஹைஃபா உள்ளிட்ட பல இடங்களில் பெரிய தாக்குதல்களைத் தொடங்கியது.
ஈரானின் பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இஸ்ரேலில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டனர், 271 பேர் காயமடைந்தனர் மற்றும் 8,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதுவரை, 30,000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் இழப்புகளுக்கு உரிமை கோரியுள்ளனர். ஈரான் 475 ஏவுகணைகள் மற்றும் 1,000 ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலைத் தாக்கியுள்ளது.
இந்த நிலையிலேயே, ஈரான் இதுவரை தனது இராணுவ பலத்தில் 30 சதவீதத்தை மட்டுமே வெளிக்காட்டியுள்ளதாக IRGC தளபதி மொஹ்சென் ரெசாயி கூறியுள்ளார்.
அதாவது, இஸ்ரேலுக்கு அதன் அழிவின் முன்னோட்டம் மட்டுமே இதுவரை காட்டப்பட்டுள்ளது என தளபதி மொஹ்சென் ரெசாயி சூசகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.