சோம்பின் அற்புத பலன்கள்
5 மார்கழி 2022 திங்கள் 15:30 | பார்வைகள் : 5679
நம்மில் பலருக்கு சோம்பின் நன்மைகள் என்னவென்று தெரியுமோ, தெரியாதோ, ஆனால், அதன் சுவை குறித்து நன்றாக தெரியும். நம் சமையலுக்கு சுவையும், மனமும் கொடுப்பதில் பெருஞ்சீரகம் தனித்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. அதே சமயம், இதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் இப்போது பார்க்கலாம்.
வாய் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது : உங்கள் மூச்சுக்காற்று கெட்ட மனம் கொண்டதாக இருக்கிறது என்றால் நம் உணவுக் குழாயில் பாக்டீரியாக்கள் குடி கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அந்த பாக்டீரியாக்களை எதிர்த்துப் போரிடும் பண்பு பெருஞ்சீரகத்திற்கு இருக்கிறது. நாம் சாப்பிட்ட பிறகு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவியாக உள்ளது. ஆகவே, ஹோட்டல்களில் சாப்பிட்ட பிறகு விருந்தினர்களுக்கு பெருஞ்சீரகம் தரப்படுகிறது.
ரத்த அழுத்தத்தை சீராக்கும் : பொட்டாசியம் சத்து நிறைந்த பெருஞ்சீரகம் நமது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதன் மூலமாக இதய நலன் காக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருப்பவர்கள் தினசரி பெருஞ்சீரக டீ அருந்தி வரலாம். அல்லது இரவில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து, காலையில் அதை வடிகட்டி அருந்தலாம்.
தாய்ப்பால் சுரக்கும் : தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தவறாமல் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இது பால் சுரப்பை தூண்டக் கூடியது ஆகும். பெருஞ்சீரகத்தைப் போலவே வெந்தயம், பூண்டு மற்றும் பாலக்கீரை ஆகியவையும் பால் உற்பத்தியை தூண்டும். இவற்றை சூப் செய்து அருந்தலாம்.
உடலில் கழிவுகளை அகற்றுகிறது : பெருஞ்சீரகத்தில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய எண்ணெய் சத்து இருக்கிறது. நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலை தூய்மையானதாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உணவு நஞ்சாகி, வயிற்று வலியாக அவதி அடைபவர்கள் பெருஞ்சீரக தண்ணீர் அருந்தலாம்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது : சாப்பிட்டு முடித்த கையோடு, ஒரு ஸ்பூன் அளவு பெருஞ்சீரகத்தை நாம் சவைத்து திண்பது, உணவு செரிமானத்திற்காகத் தான். குறிப்பாக, மசாலா நிறைந்த அசைவ உணவுகளை சாப்பிடும் நாட்களில் கட்டாயம் இதை எடுத்துக் கொள்ளலாம். செரிமானத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது.
இப்படியும் சாப்பிடலாம் : சிலருக்கு பெருஞ்சீரகத்தின் பச்சை வாசம் பிடிக்காமல் இருக்கலாம். அப்படி இருப்பின் அரிசி மற்றும் பெருஞ்சீரகம் ஆகிய இரண்டையும் சம அளவில் வறுத்து சாப்பிடலாம். அதன் சுவை உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். இதுவும் பிடிக்கவில்லை என்றால் பெருஞ்சீரக மிட்டாய்களை எடுத்துக் கொள்ளலாம்.