'ஐய்யோ உலகம் அழிகிறது' - பிரான்சின் முதல் பூகம்பம்.
29 சித்திரை 2016 வெள்ளி 11:56 | பார்வைகள் : 19257
1909ஆம் வருடம் அது. தொடர்ச்சியாக ஒவ்வொரு மாத இடைவெளியில் பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரான், துருக்கி, பாகிஸ்தான், வழக்கம்போல் இந்தோனேசியா, மொராக்கோ, ஜப்பான், போர்த்துக்கல், சீனா... இந்த வரிசையில் இறுதியாக சேர்ந்துகொண்டது தான் பிரான்ஸ். உலகம் அழியப்போகிறதோ என உலக மக்களிடம் அச்சம் தோன்றலாயிற்று.
1909ம் வருடம், ஜூன் மாதம், 11ம் திகதியின் குறிப்பிட்ட ஒரு நிமிடத்தில், Salon-de-Provence பகுதியில்... ஊரே அதிரும்படியான சத்தம் ஒன்று கேட்டது. ஒரே ஒரு நிமிடம் தான், நிலமெல்லாம் ஒருதடவை பேஸ்புக் நோட்டிஃபிகேஷன் பெறப்பட்ட தொலைபேசி போல 'வைப்ரேட்' ஆக, கம்பீரமாக நின்றுகொண்டிருந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று பாரிய சத்தத்துடன் சரிந்தது.
பூகம்பம் பிரான்சுக்கு புதுசு. கேள்விப்பட்டதோடு சரி.. இப்போதுதானே நேரில் பார்க்கிறோம். மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது. Salon - de - Provence பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் உடைந்து விழுந்தும், பல கட்டிடங்கள் தங்கள் முதுகில் பல கோடுகளையும் பெற்றுக்கொண்டன. மக்கள் தெருவிற்கு சிதறி ஓடினார்கள். வீடுகள் உடைந்து நொருங்கியிருப்பதை பார்க்கின்றனர். 'ஐய்யய்யோ உலகம் அழிகிறது!' என கதை ஊர் உலகத்திற்கு பரவியது.
Salon - De - Provence பகுதியை அடுத்துள்ள, Vernègues, Lambesc, Saint-Cannat மற்றும் Rognes பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுவரை காலமும் வேலைகள் எதுவும் இல்லாமல் இருந்த பிரான்சின் தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மைய்யம், குடுகுடுவென ஓடிப்போய், 6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக குறித்துக்கொண்டது.
மொத்தமாக 46 உயிர்கள் இந்த பூகம்பத்தில் கொல்லப்பட்டன. 250 பேர்களுக்கும் அதிகமானோர் காயமுற்றிருந்தனர். இரண்டாயிரம் கட்டிடங்கள் தரைமட்டமாயின. இற்றைக்கு 107 வருடங்களுக்கு முன்னர்!!