ஸ்டாலின் டில்லி பயணம்: விஜய் சரமாரி கேள்வி

26 வைகாசி 2025 திங்கள் 10:14 | பார்வைகள் : 682
மாநிலத்துக்கு தேவையான நிதியை பெறுவதற்காகத் தான், 'நிடி ஆயோக்' கூட்டத்தில் கலந்து கொண்டதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னாலும், தன் குடும்ப வாரிசு நிதியை காப்பாற்றவே அவர் டில்லி சென்றார்' என, வெளிப்படையாக விமர்சித்துள்ள த.வெ.க., தலைவர் விஜய், இவ்விவகாரத்தில் முதல்வரை நோக்கி சரமாரி கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.
தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில், மதுபான கொள்முதல், பார் டெண்டர் போன்ற நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றின் வாயிலாக கிடைத்த பணத்தை, சட்டவிரோத பரிமாற்றம் செய்திருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், பொது மேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை, டாஸ்மாக் தலைமையகம், அதிகாரிகள் வீடுகளில் 'ரெய்டு' நடத்தி, சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளது.
இடைக்கால தடை
இந்த விவகாரத்தில், முதல்வரின் உறவினரான ஆகாஷ் பாஸ்கரன், முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமான ரத்தீஷ், விக்ரம் ஜுஜு போன்றவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கருதுகிறது. அதன் அடிப்படையில், இவர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர், விசாரணையில் சிக்காமல் வெளிநாடு சென்று விட்டதாக கூறப்படும் நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால தடை பெற்றுள்ளது.
தடை நீக்கப்படும் என்ற நம்பிக்கையில், அமலாக்கத்துறை மீண்டும் விசாரணையை துவங்கும் மும்முரத்தில் உள்ளது.
அதையறிந்த தமிழக அரசு உயர் அதிகாரிகள் பலரும், ஆட்சி மேலிடத்தில் இருப்போருக்கு நெருக்கடி கொடுத்து, பிரதமர் மோடியிடம் பேசி பிரச்னையை சுமுகமாக தீர்க்க அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
மேல் முறையீடு
மூன்று ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டத்துக்கு போகாத முதல்வர் ஸ்டாலின் திடீரென டில்லி சென்றதுடன், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசியதும், இந்த கருத்துக்கு வலு சேர்க்கிறது.
இந்த சந்திப்புக்காக, தி.மு.க., தரப்பில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் வாயிலாக, பா.ஜ., தலைமை மற்றும் பிரதமர் மோடியை நெருங்கியதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பகிரங்கமாக பேசப்படுகிறது.
இந்த சூழலில், 'டாஸ்மாக் வழக்கில் சிக்கப் போகும் தன் வாரிசை காக்கவே, முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றார்' என, வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரான நடிகர் விஜய். ஸ்டாலின் சந்திப்பு தொடர்பாக அவர் சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை தொடர்ந்து, சமீபத்தில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் தி.மு.க., தலைமையின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, இடைக்கால தடையும் வாங்கியது.
இது நிரந்தர தடையல்ல என்பதால், எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு முதல்வர் ஸ்டாலின் தள்ளப்பட்டார்.
வீடியோ வெளியிட்டார்
அதற்கேற்றாற்போல அமைந்தது தான் நிடி ஆயோக் கூட்டம். கடந்தாண்டு நிடி ஆயோக் கூட்டம் டில்லியில் நடந்தபோது, அங்கு செல்லாததற்கான காரணங்களை அடுக்கி, முதல்வர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டார்.
அப்போது சொன்ன காரணங்கள், இப்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது, இம்முறை மட்டும் ஏன் டில்லி செல்ல வேண்டும்?
எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத்துறை படுத்தும்பாடு தான். என்றைக்கு இருந்தாலும், அமலாக்கத்துறை நடவடிக்கை காலை சுற்றும் பாம்பு என்பதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின், 1,000 கோடி ரூபாய் ஊழல் தோண்டி எடுக்கப்பட்டால், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில், இந்த முறை நிடி ஆயோக் கூட்டத்தை காரணமாக வைத்து டில்லி சென்றார்; பிரதமரையும் தனியாக சந்தித்தார்.
உண்மையிலேயே அந்த சந்திப்பில், அமலாக்கத்துறை சோதனைகள், வழக்குகள் தொடர்பாகவும், தன் குடும்பத்திற்காகவும் பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என்று, முதல்வர் மனசாட்சியுடன் வெளிப்படையாக கூற முடியுமா?
முதல்வர் ஸ்டாலின் தங்களிடம் தஞ்சம் அடையத்தான் வருகிறார் என்பது தெரிந்தும், தி.மு.க.,வை அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக எதிர்ப்பது உண்மையெனில், பா.ஜ.,வால் எப்படி இவர்களை கொஞ்சி குலாவி வரவேற்க முடியும்?
இது தான், இவர்கள் இருவருக்குள்ளும் உள்ள மறைமுக கூட்டின் வெளிப்பாடு. தி.மு.க., - பா.ஜ., இடையிலான மறைமுக கூட்டணியும், பேர அரசியலும் வெளிச்சத்திற்கு வந்து விட்டதையே இது காட்டுகிறது.
மாநிலத்திற்கான நிதியை பெறுவதற்காக அல்ல; தன் குடும்ப வாரிசு நிதியை காப்பாற்ற மட்டுமே முதல்வர் சென்றார் என்பது, சாமானிய மக்கள் நன்கு அறிந்ததே. 2026 சட்டசபை தேர்தலில், தோல்வி உறுதி என்பது தி.மு.க.,விற்கு தெரிந்து விட்டது. அதனால், மத்திய பா.ஜ.,விற்கு சாமரம் வீசியாவது, இனி காலத்தை ஓட்டி தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்கிறது.
இப்படி இறுமாப்பு கணக்குகளை போடுபவர்களுக்கு, தமிழக மக்கள் தக்க பாடத்தை புகட்ட தயாராகி விட்டனர். வரும் காலத்தில் பா.ஜ.,வுடன், தி.மு.க., நேரடி கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்பட கூடாது.
அந்த அளவுக்கு தமிழகத்தை சுரண்டி கொள்ளை அடித்து, நெடுஞ்சாண் கிடையாக தி.மு.க., சரணாகதி அடைந்துள்ளது. தி.மு.க.,வின் ஊழல் பெருச்சாளிகள், தமிழக மக்களால் தோற்கடிக்கப்பட்டு, அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்படுவர்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சி தலைவரான பழனிசாமியும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் முதல்வரின் டில்லி பயணத்துக்கான நோக்கத்தை விமர்சனம் செய்து வரும் நிலையில், விஜயும் அதை கையில் எடுத்து சரமாரியாக கேள்விகள் எழுப்பியிருப்பது, தமிழக அரசியலில் பரபரப்பை அதிகரித்துள்ளது.