பிரெஞ்சு தொடரூந்து - ஒரு ஈடு இணையற்ற சேவை!
27 சித்திரை 2016 புதன் 12:10 | பார்வைகள் : 20563
பிரான்சில் இன்றைய நாளில், போக்குவரத்து துறையில் தொடரூந்துகளின் பங்களிப்பு அளப்பரியது. பிரான்சின் தொடரூந்து சேவைகளின் தோற்றம் பற்றி சுருக்கமாக பாக்கலாம்.
ஐரோப்பாவில் முதல் தடவையாக தொடரூந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது எங்கள் பிரான்சில் தான். 1823 ஆம் ஆண்டு.
Pierre Michel Moisson-Desroches எனும் நீளமான பெயரை கொண்ட இஞ்சினியருக்கே, நீளமான தொடரூந்து சேவையை பிரான்சில் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பின்னர் அவர், 1814ம் ஆண்டு தன்னுடைய எண்ணதை மாமன்னர் நெப்போலியனிடம் தெரிவிக்கிறார். அங்கு ஆரம்பிக்கிறது பிரான்ஸ் தொடரூந்துகளின் வரலாறு.
1827ம் ஆண்டு, பரிசின் Saint-Étienne பகுதியில் இருந்து Andrézieux வரை, முதலாவது தொடரூந்து சேவை ஆரம்பித்தது. 'கூட்சு வண்டியிலே.. ஒரு காதல் வந்திரிச்சு' என அடுத்த ஒன்பது வருடங்களுக்கு, வெறுமனே பொதிகளையும், பொருட்களையுமே ஏற்றிச்சென்றது இந்த தொடரூந்து.
1835ம் ஆண்டு முதல் தடவை பயணிகளை ஏற்றக்கூடிய தொடரூந்து வெள்ளோட்டம் விடப்பட்டது. Saint-Étienneல் இருந்து Lyon வரை இந்த பயணிகள் தொடரூந்து ஆரம்பித்தது. முதல் தொடரூந்து பயணம் பொதுமக்களுக்கு அலாதி பிரியத்தை கொடுக்க, காரணமே இல்லாமல் Lyon நோக்கி பயணப்பட ஆரம்பித்தார்கள் பிரெஞ்சு குடிமக்கள். இன்று தெற்கு பிரான்சில், Lyon மிகப்பெரிய தொடரூந்து நிலையத்தை கொண்டிருக்கிறது.
இன்று பிரான்சில் 40 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு தொடரூந்து பாதைகள் அமைத்து, சேவைகள் நடத்தி வருகிறது. நேற்றைய தினம் தொடரூந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தமும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் என்பதை தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் செல்லவும்.