மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சந்தானம்…. ?

26 வைகாசி 2025 திங்கள் 11:48 | பார்வைகள் : 510
கடந்த சில ஆண்டுகளாக, நடிகர் சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும், சமீபத்தில் கூட அவர் ஹீரோவாக நடித்த 'டி.டி. நெக்ஸ்ட் லெவல்' என்ற திரைப்படம் சுமாரான வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், தனது திரையுலக வாழ்விற்கு பிள்ளையார் சுழி போட்டது சிம்பு என்பதால், அவருடைய படத்தில் மட்டும் மீண்டும் சந்தானம் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதும், 'எஸ்.டி.ஆர் 49' படத்தில் சந்தானம் நடிக்க இருப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதற்கு மேலாக, சந்தானம் சமீபத்தில் அளித்த பேட்டியில், "எல்லா படத்திலும் தன்னால் முன்பு போல் காமெடி கேரக்டரில் நடிக்க முடியாது; சிம்புவுக்காக தான் இந்த படத்தில் நடித்தேன்," என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க சந்தானத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
'எஸ்.டி.ஆர் 49' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது போலவே, 'ஜெயிலர் 2' படத்திலும் நடிக்க அவர் ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.