'பிச்சைக்காரன் 3' உருவாகிறதா?

26 வைகாசி 2025 திங்கள் 16:21 | பார்வைகள் : 721
பிச்சைக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக இணைந்த நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குனர் சசி, மீண்டும் இணைய இருக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ’பிச்சைக்காரன்’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில், சசி இயக்கத்தில் உருவான ’பிச்சைக்காரன்’ திரைப்படம் வெளியானது என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே.
தமிழை விட தெலுங்கில் இந்த படம் பல மடங்கு வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் ’பிச்சைக்காரன் 2’ திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகி, ஓரளவு வெற்றி பெற்றது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் இயக்குனர் சசி மற்றும் விஜய் ஆண்டனி இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன், நடிகர் அஜய் திஷான் என்பவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பதும், அவர் விஜய் ஆண்டனியின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து, இதில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவரும்.
மேலும், இது ’பிச்சைக்காரன்’ படத்தின் அடுத்த பாகமா? அல்லது தனி கதையா என்பது குறித்த தகவலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், இந்த வெற்றி கூட்டணியை தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.