மோனலிசாவின் மர்ம புன்னகை - விடைகாணமுடியாத மர்மம்! ( பகுதி 1)
22 சித்திரை 2016 வெள்ளி 10:19 | பார்வைகள் : 20411
மோனலிசாவின் ஓவியம் லூவர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே.., ஆனால் நீங்கள் மோனலிசாவின் மர்ம புன்னகை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர் லூவர் அருங்காட்சியகத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.
உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகம் எங்களுடைய லூவர் தான். லூவரில் உள்ள அத்தனை பொருட்களையும் நீங்கள் ஒரு பொருளுக்கு '30 வினாடிகள்' படி பார்க்க ஆரம்பித்தால், உங்களுக்கு முழுதாய் நூறு நாட்கள் வேண்டும். 380,000 'மாஸ்டர் பீஸ்' பொருட்கள் இவ் அருங்காட்சியகத்தில் உள்ளது.
ஒரு நாளைக்கு 15,000 பார்வையாளர்கள் சராசரியாக வருகின்றனர். இவர்களில் 70 வீதமானவர்கள் வெளிநாட்டினர்.
லூவர் ஆரம்பத்தில் அருங்காட்சியகமாக இருக்கவில்லை. 1190ம் வருடம் கட்டப்பட்ட இந்த கட்டிடம் முதலில் 'பிரெஞ்சு கோட்டை'யாக இருந்தது. 1793 ஆண்டு தான் இது லூவர் அருங்காட்சியகமாக உருமாறியது. முதன் முதலாக லூவர் பொதுமக்களுக்காக் திறக்கப்படும்போது, இங்கே 537 ஓவியங்கள் மட்டும் தான் இருந்தன.
பின்னர், 1796 தொடக்கம் 1801 வரை, லூவரை மூடிவிட்டார்கள். அதன் பின்னர் மாவீரன் நெப்போலியன் லூவர் அருங்காட்சியகத்தை 'நெப்போலியன் அருங்காட்சியகம்' என பெயரை மாற்றிவிட்டு மீண்டும் திறந்தார். மேலும் பல பொருட்களை கொண்டுவந்து சேர்க்கும்படியும் பணித்தார். ஆனால் லூவர் எனும் பெயர் மக்கள் மத்தியில் பழக்கப்பட்டு விட்டதால் மீண்டும் 'லூவர் அருங்காட்சியக'மாகவே மாறியது.
2015ல், உலகில் அதிகப்பேரால் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகமாக லூவர் மாறியது. அது இன்றுவரை தொடர்கிறது.
மோனலிசாவின் மர்ம புன்னகையும், ஓவியத்தை திருடியவனின் கதையும்.. நாளை பார்க்கலாம்!