ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்

28 வைகாசி 2025 புதன் 12:34 | பார்வைகள் : 1125
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று (மே 28) போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரம் ஜூன் 2ல் அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். பல்கலை வளாகத்திலேயே நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், 37, என்பவரை கைது செய்தனர்.
இவர் தி.மு.க., பிரமுகர் என்பது விசாரணையில் தெரியவந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம்பெற்ற சிறப்பு குழு அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஞானசேகரன் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். 11 குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளன என்று நீதிபதி அறிவித்தார். தண்டனை விபரம் ஜூன் 2ல் அறிவிக்கப்பட உள்ளது.
அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் பின்னணி என்ன?
* அண்ணா பல்கலை., வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
* டிசம்பர் 24ம் தேதி சென்னை கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனில் மாணவி புகார் அளித்தார்.
* டிசம்பர் 25ம் தேதி புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், தி.மு.க., பிரமுகர் ஞானசேகரனை கைது செய்தனர்.
* டிசம்பர் 28ம் தேதி வழக்கு விசாரணையை 3 பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டது.
* ஜனவரி 8ம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
* பிப்ரவரி 24ம் தேதி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
* இந்த பாலியல் வழக்கில் தி.மு.க., பிரமுகர் ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
* இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்தத மார்ச் 7ம் தேதி மாற்றப்பட்டது.
* பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல் உள்பட 12 பிரிவுகளில் ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
* சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஏப் 23ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. தினந்தோறும் விசாரணை நடந்தது.
* வழக்கில் போலீசார் தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.
*கடந்த மே 20ம் தேதி விசாரணை நிறைவடைந்த பின்னர் இரு தரப்பினர் இறுதி வாதங்களை முன் வைத்தனர்.
* அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். தண்டனை ஜூன் 2ல் அறிவிக்கப்பட உள்ளது.