பிரான்சின் மிகப்பெரிய பாலம்!
17 சித்திரை 2016 ஞாயிறு 10:33 | பார்வைகள் : 20835
பிரான்சின் மிகப்பெரிய பாலம் எது தெரியுமா?? நீங்கள் என்றாவது பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்கு காரில் சென்றிருக்கிறீர்களா?? என்றால், உங்களுக்கு நிச்சயம் தெரிந்தே இருந்திருக்கும். ஆம், பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்கு செல்லும் முதன்மையான சாலைகளில் ஒன்றான Millau Viaduct பாலமே, பிரான்சின் மிகப்பெரிய பாலம் ஆகும்.
1987 ல், பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்கு பாலம் கட்டலாம் என ஒரு பேச்சு எழுந்தது. அந்த பேச்சு அடுத்த நான்கு வருடங்கள் நீ....ண்...டு... 1991ல் தான் ஒரு முடிவிற்கு வந்தது. Tarn ஆற்றை ஊடறுத்து, இந்த பாலத்தை கட்டலாம் என ஒரு முடிவிற்கு வந்தார்கள். அதையடுத்து, வேலைகள் வேகமாக முடக்கிவிடப்பட்டன.
முதலில் பல நிறுவனங்களிடமிருந்தும் கட்டுமான பணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. ஏழு கட்டுமான நிறுவனங்களுடனும், எட்டு 'மாதிரி வரைபடம்' ( Design) வரைவதற்கான நிறுவங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது அரசு.
பின்னர் ஐந்து 'மாதிரி' வரைபடங்களை பொதுமக்களிடம் போட்டிக்கு விட்டிருந்து, அதில் Michel Virlogeux மற்றும் Norman Foster இருவரும் சேர்ந்து உருவாக்கிய 'மொடல்' வெற்றி பெற்று, கட்டுமான பணியை Cable-stayed bridge நிறுவனத்திடம் ஒப்படைத்தது அரசு.
39 கோடியே, 40 லட்சம் யூரோக்கள் செலவில் மிக பிரம்மாண்டமாக, கட்டுமான பணிகள் ஆரம்பித்தது. டிசம்பர் 14, 2004ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டு, இரண்டு நாட்களின் பின்னர் பொதுமக்கள் பாவனைக்காக விடப்பட்டது இந்த மேம்பாலம்.
இன்று : உலகின் மிக உயரமான பாலங்களில் முதலாவது இடத்தையும், மிகப்பெரிய பாலங்களில் 12வது இடத்தையும் கொண்டிருக்கிறது. மொத்தம் 2460 மீட்டர் நீளத்தையும் கொண்டுள்ளது.