அதிசயக்க வைத்த பிரான்சின் முதல் உலக வர்த்தக கண்காட்சி
10 சித்திரை 2016 ஞாயிறு 07:42 | பார்வைகள் : 20176
பணக்கார நாடுகள் முழுவதும், தொடர்ச்சியாக உலக வர்த்தக கண்காட்சி, மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது என்பது நாம் அறிந்ததே. இதன் தொடக்கம் லண்டன் மாநகரம் தான். 1851ம் ஆண்டு லண்டன் Hyde Park பகுதியில் மிக பிரம்மாண்டமாக உலக வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. அப்போது, இது தொடர்ச்சியாக நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வு என்பதை ஏற்பாட்டாளர்களே அறிந்திருக்கவில்லை.
"அனைத்து நாடுகளினதும் தொழில் துறை வர்த்த கண்காட்சி!"! எனும் தலைப்பில் தான் முதல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியின் சூத்திரதாரர் திரு. Prince Albert ஆவார். இவர் லண்டன் மகாராணி எலிசபெத்தின் கணவர். தொழில் புரட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த காலத்தில் இந்த கண்காட்சி லண்டன் நகரிற்கு பாரிய லாபத்தை ஈட்டித்தந்தது.
இதை தொடர்ந்து அடுத்த உலக வர்த்தக கண்காட்சி 1953ம் வருடம் நியூயார்க்கில் நடைபெற்றது. தொடர்ந்து 1862ல் மீண்டும் லண்டன், 1876ல் பிலதெல்பியா என தொடர, பிரான்சில் எப்போது?? என பிரெஞ்சு மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கலாகினர். பிரெஞ்சு மக்களின் கேள்விக்கு பதில் சொல்லும் அந்த வருடமும் வந்தது.
1889 ஆம் ஆண்டு பிரான்சில் முதல் தடவையாக உலக கண்காட்சி நடைபெற்றது. இதுவரை எந்த நாடும் கண்டிராத மிகப்பிரம்மாண்டமான கண்காட்சியாக அது உருவெடுத்தது. 240 ஏக்கர் நிலப்பகுதி இந்த கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டது. 61, 722 நிறுவனங்கள் இந்த வர்த்தக கண்காட்சியில் பங்கெடுத்திருந்தன.
1889ஆம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி கண்காட்சி ஆரம்பமாகியது. படையெடுத்து வந்திருந்த மக்கள் அனைவருக்கும் மிக பிரம்மாண்டமான கண்கவர் விருந்து வைத்தது பிரஞ்சு அரசு. வந்தவர்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்க்கும் படி மிக பிரம்மாண்டமான முறையில் அங்கு கம்பீரமாக ஈஃபிள் கோபுரம் நின்றிருந்தது.
இந்த ஈஃபிள் கோபுரத்தின் அழகையும், அதன் பிரம்மாண்டத்தையும் பார்ப்பதற்காகவே பல நாடுகளில் இருந்து மக்கள் படையெடுத்தனர். பல பிரமுகர்களும் வந்து சேர்ந்திருந்தனர். 'ஆஹா இதுவல்லவோ கண்காட்சி!' என மெய்சிலிர்க்க வைத்த இந்த கண்காட்சி ஒக்டோபர் மாதம் 13ம் திகதி, 1889ம் ஆண்டு முடிவடைந்தது. ஆனால் அதிசயமே அசந்து பார்க்கும் ஈஃபிள் டவர் அங்கேயே தங்கிவிட்டிருந்தது... நிரந்தரமாக!!
சொல்ல மறந்துவிட்டோமே.. இந்த கண்காட்சி நடைபெற்ற நான்கு மாதங்களில் மொத்தம் இரண்டு கோடியே எண்பத்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டுச்சென்றிருக்கிறார்கள்.