Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் நகரத்தில் இருந்துகொண்டு இந்த தெருக்களில் எல்லாம் நடக்காவிட்டால் எப்படி?

 பரிஸ்  நகரத்தில் இருந்துகொண்டு இந்த தெருக்களில் எல்லாம் நடக்காவிட்டால் எப்படி?

2 சித்திரை 2016 சனி 08:00 | பார்வைகள் : 19874


பாரிஸ் மிக அழகான நகரம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதுவும் போக்குவரத்து துறையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை கொண்டுள்ளது பிரான்ஸ். பெரு வீதிகள் தொடங்கி, சிறு குச்சு ஒழுங்கைகள் வரை அத்தனையையும் அழகாக வைத்திருக்கிறார்கள். 
 
இன்று பாரிசினுள் சிறிய இன்பச்சுற்றுலா போகலாம். நீங்கள் பாரிசினுள் வசிப்பவராக இருந்தால்.. இந்த தெருக்களில் எல்லாம் நடக்கவேண்டும். இந்த தெருக்களையெல்லாம் நீங்கள் ரசிக்க வேண்டும். வாருங்கள் பாரிசின் சிறந்த பத்து தெருக்களை பட்டியலிடுவோம்!!
 
Rue des Barres 
 
பாரிசின் மிக மிக அழகான தெருவும், அவசியம் பார்க்கவேண்டிய தெருவுமாக இந்த Rue des Barres இருக்கிறது. 15ம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இந்த தெருவுக்குள் நீங்கள் நுளைந்தாலே ஒரு புராதன கோட்டைக்குள் நுளைந்த மாதிரியான எண்ணம் வரும். பல தெருவில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் மிக பழமையானவை. இந்த தெருவில் பல திரைப்படங்களில் காட்சி எல்லாம் படமாக்கியிருக்கிறார்கள். ஹொலிவூட் திரைப்படமான the ninth gate திரைப்படத்தில் இந்த தெருவை மிக அழகாக காட்டியிருப்பார்கள். மட்டுமல்லாது புகழ்பெற்ற Chez Julien உணவகமும் இந்த தெருவில் தான் உள்ளது. 
 
 
Rue de l'Abreuvoir
 
வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசிக்கக்கூடிய தெரு தான் இந்த Rue de l'Abreuvoir. கொள்ளை அழகு என்பார்களே.... அப்படி ஒரு அழகு. இந்த தெருவில் இருக்கும் வீடுகளும், விடுதிகள் அவ்வளவு ரசனையாக உருவாக்கியிருக்கிறார்கள். பாதசாரிகளுக்கான பிரத்யேகமான தெரு இது. ஒரு தடவை சென்று ஒரு செல்ஃபியை எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளுங்கள்!
 
 
Cour du Commerce-Saint-André
 
18ம் நூற்றாண்டின் மதிமயக்கும் சாலை. Coffee மற்றும் Hot Chocolate இற்கு பெயர் போன தெரு. அகலம் குறைவான தெரு.  பாரிசின் முதல் coffee house ஆன 'Le Procope' இந்த தெருவில் தான் உள்ளது.  மாலை வேளைகளில் இங்கு கூடி இருந்து பேசி, café அருந்துவதற்காகவே ஒரு கூட்டம் வரும். 
 
Rue Montorgueil
 
பிராஸ்சை தெரிந்துகொள்ள, நீங்கள் அவசியம் இந்த தெருவினுள் நுளைய வேண்டும். 'பூர்வீகம்' என்பார்களே... அதுபோல் பிரான்ஸ்சின் பூர்வீகமே இந்த தெருவில் தான் உள்ளது. பிரான்சின் பூர்வீக மக்களில் செயற்பாடுகளை இங்கு நீங்கள் அவதானிக்கலாம். எப்போதும் ஜனநடமாட்டம் நிறைந்த இந்த தெரு முனையில் உள்ள பூக்கள் விற்கும் சிறிய கடை மகா பிரபலம்!!
 
 Rue Crémieux
 
இந்த தெருவை பார்த்ததுமே நீங்கள் காதலில் விழுந்துவிடுவீர்கள். உங்கள் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் தீர்ந்து, நீங்கள் குழந்தையாகிவிடுவீர்கள். இந்த தெருவிற்கு  அன்பாக  ' Notting Hill of Paris' என ஒரு செல்லப்பேரும் உண்டு. அழகிற்கும் அமைதிக்கும் பெயர்போன இத்தெருவை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும். 
 
Rue des Rosiers
 
இங்கு மாலை வேளைகளில் கூட்டம் சொல்லிமளாது. எதற்கு என்கிறீர்கள்?? சாண்ட்விச் சாப்பிட. போய்தான் பாருங்களேன். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெரு இந்த Rue des Rosiers. இரண்டு பக்கங்களில் பேக்கரி உள்ள சுவையான தெரு இது. 
 
 
Rue Lepic
 
இந்த தெரு பல பெருமைகளை கொண்டுள்ளது. நீங்கள் ஒரு 'பிரெஞ்சு பேகர்' விரும்பி என்றால் உங்களுக்கே உங்களுக்கானது இந்த தெரு. Café des Deux Moulins என்ற புகழ்பெற்ற café இந்த தெருமுனையில் தான் உள்ளது. இந்த தெருவிற்குள் நுளைந்ததும் 'இந்த தெருவை எங்கோ பாத்திருக்கோமே??' என்ற எண்ணம் தோன்றும். புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்படமான Amélie திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள்!!
 
Rue Saint-Antoine
 
மிக பிரபலமான 'பிஸி'யான தெரு இது. பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமான உள்ள இந்த தெரு 1780ம் ஆண்டுகளில் திருடர்களாலும், ரவுடி கூட்டங்களாலும் நிறைந்திருந்ததாம். இப்போது அநியாயத்திற்கு திருந்தி நல்லவர்களை மட்டும் கொண்ட தெரு இது. Saint-Paul-Saint-Louis தேவாலயத்தில் ஆரம்பித்து..., நீள்கிறது இந்த தெரு! 
 
 
Avenue Winston Churchill
 
ஆம்!! இந்தத்தெருவிற்குள் நீங்கள் நுளைந்துவிட்டால் வின்ஸ்டன் சர்ச்சில் உங்களை அவதானித்துக்கொண்டே இருப்பார். 1900ம் ஆண்டில் கட்டப்பட்ட Petit Palais கட்டிடம் இந்த தெருவில் தான் உள்ளது. பிரம்மாண்டமான Grand Palais கூட இந்த தெருவில் தான் உள்ளது. இரண்டும் போதாதா இந்த தெரு பிரபலமாவதற்கு. 
 
Quai de Jemmapes
 
உங்கள் அன்புக்காதலியுடன் நேரத்தை செலவிட இந்த தெருவை விட்டால் வேற 'ஒப்ஷன்' இருப்பதாக தெரியவில்லை.  ஒரு பக்கம் மரங்கள் நிறைந்து, மறுபக்கம் Saint-Martin கால்வாயினால் குளிர்ந்து ஜில்லிடுகிறது இந்த தெரு. 1938ம் ஆண்டு Hôtel du Nord என ஒரு பிரெஞ்சு திரைப்படம் வெளிவந்திருந்தது. அந்த திரைப்படத்தில் வந்த உணவகம் இந்த தெருவில் தான் உள்ளது. 
 
அவ்வளவு தான் பட்டியல். கிடைக்கும் லீவு நாட்களில் எல்லாம் iPod ஒன்றை எடுத்துக்கொண்டு.. இந்த தெருக்களில் காலாற நடந்து, ரசித்து வாருங்கள்!!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்