Paristamil Navigation Paristamil advert login

வயதாவதை தடுக்கும் வைட்டமின் பற்றி தெரியுமா ?

வயதாவதை   தடுக்கும் வைட்டமின் பற்றி தெரியுமா ?

31 வைகாசி 2025 சனி 13:51 | பார்வைகள் : 2551


வயதாவது என்பது ஒரு இயற்கையான செயல்முறை. எனினும் அதனை தாமதப்படுத்துவது அல்லது வயதானவர்களை இளமையாக மாற்றுவதற்கான தேடல் என்பது முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறது. பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் வயதாகும் செயல்முறையை மெதுவாக்குவது சம்பந்தமான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி சமீபத்தில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இந்த வயதாகும் செயல்முறைக்கு எதிராக பாதுகாப்பு தரக்கூடிய ஒரு குறிப்பிட்ட வைட்டமின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது வைட்டமின் டி என்று சொல்லப்படுகிறது. வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வது வயதாகும் செயல்முறையின்போது குறையும் டீலோமியர்களை பராமரிப்பதற்கு உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வைட்டமின் டி சப்ளிமெண்ட்கள் டீலோமியர்களை பாதுகாக்கவும், டீலோமியர் நீலத்தை பராமரிக்கவும் உதவுவதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வீக்கத்தை குறைப்பது மற்றும் வயது காரணமாக ஏற்படும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதிலும் வைட்டமின் டி முக்கியமான பலன்களை தருகிறது.


டீலோமியர்கள் என்பது ஒரு குரோமோசாமின் முனையில் உள்ள DNA வரிசைகளில் மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு பகுதி. இவை குரோமோசோம்களின் முனைகளை சேதத்தில் இருந்து பாதுகாப்பது அல்லது பிற குரோமோசோம்களுடன் இணையாமல் பார்த்துக் கொள்வது போன்ற பங்குகளை வகிக்கின்றன. டீலோமியர்கள் குறுகுவது என்பது வயதாகும் செயல்முறையின் ஒரு இயற்கையான பகுதியாக கருதப்படுகிறது மற்றும் இது பல்வேறு வயது தொடர்பான நோய்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளுடனும் தொடர்புடையதாக அமைகிறது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட சில குறுகிய கால ஆய்வுகளில் வைட்டமின் டி அல்லது ஒமேகா- 3 கொழுப்பு அமில சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது டீலோமியர்களுக்கு ஆதரவு தர உதவுவதாக பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால் அதன் மூலமாக கிடைத்த முடிவுகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக இருந்தது. எனினும் இந்த புதிய ஆய்வில் வைட்டமின் D3 சப்ளிமெண்ட் எடுத்துக் கொண்ட நபர்களுக்கு 4 வருடங்களில் டீலோமியர்கள் குறுகுவது குறைக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சப்ளிமெண்ட்கள் எடுக்காதவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு 3 வருட வயதாகும் செயல்முறை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஒமேகா-3 கொழுப்பு அமிலம் சப்ளிமெண்ட்ஸ் டீலோமியர்களின் நீளத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

சூரிய ஒளி என்பது வைட்டமின் டி ஊட்டச்சத்தை இயற்கையான முறையில் பெறுவதற்கான ஒரு சிறந்த வழி. நம்முடைய தோலை சூரியனிலிருந்து வெளிவரும் அல்ட்ரா வைலட் B (UVB) கதிர்களுக்கு வெளிப்படுத்தும் போது, அது வைட்டமின் டி -யை உற்பத்தி செய்கிறது. மேலும் வஞ்சிரம், கானாங்கெளுத்தி, மத்தி, சூரை மீன், சிவப்பு இறைச்சி, முட்டை, மஞ்சள் கரு, கல்லீரல் போன்றவையும் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கான சிறந்த உணவு மூலங்களாக அமைகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்