பிரான்சுக்குத் திரும்பி வரும் பிரெஞ்சு இராணுவம்
30 பங்குனி 2016 புதன் 17:00 | பார்வைகள் : 20490
மத்திய ஆப்பிரிக்காவில் நிலைகொண்டிருக்கும் தனது படைகளை திரும்ப அழைக்கப்போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்காவில் கடந்த 3 வருடங்களாக நிலைகொண்டிருந்த பிரெஞ்சு ராணுவத்தினர் அங்கு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதில் பிரெஞ்சு படையினர் வெற்றி கண்டிருந்தனர். இந்நிலையில் தமது நடவடிக்கைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு இந்த ஆண்டு நடுப்பகுதியில் பிரெஞ்சுப்படையினர் பிரான்ஸ் வருவார்கள் என்று பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஐனா ராணுவத்தை சேர்ந்த பன்னிரெண்டாயிரம் வீரர்களுக்கு உதவியாகவும் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்காகவும் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு பிரெஞ்சு ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களின் எண்ணிக்கை பின்நாட்களில் 900 ராணுவவீரர்களாக குறைக்கப்பட்டபோதும் இப்போது முழு வீரர்களையும் திருப்பி அழைக்கப்போவதாக பிரெஞ்சு பாதுகாப்பு துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பிரெஞ்சு ராணுவத்தினர் மத்திய ஆப்பிரிக்காவில் நிலைகொண்டிருந்தபோது பல்வேறு மோதல்களில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது பல உயிர் இழப்புக்களையும் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.