SAÔNE-ET-LOIRE விபத்து: 13 வயது சிறுவன் உயிரிழப்பு - 15 வயதுடைய சாரதி!

3 ஆடி 2025 வியாழன் 14:51 | பார்வைகள் : 505
Montceau-les-Mines (Saône-et-Loire) அருகே இடம்பெற்ற ஒரு மோசமான வாகன விபத்தில், 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்ததுடன் 15 வயதுடைய நான்கு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து, காவற்துறையினருடன் நடைபெற்ற துரத்தலில் ஏற்பட்டது என ஜோந்தார்மரி தகவல் தெரிவித்தது.
விபத்து காலை 4:10 மணியளவில் கூர்தோன் (Gourdon) என்ற கிராமத்தில் நடந்தது.
காவற்துறையினர் சந்தேகத்திற்கிடமான நடத்தை கொண்ட ஒரு Peugeot சிற்றுந்தை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வாகநத்தைச் செலுத்தி வந்த 15 வயதுச் சிறுவன் காவற்துறையினரின் கட்டளைக்கு நிற்க மறுத்து தப்பிச்செல்வதற்கு முயற்சி செய்தார்.
பின்னர் அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி ஒரு மரத்தில் மோதி வாகனம் விபத்திற்குள்ளாகியது. சிற்றுந்தின் பின் இருக்கையில் இருந்த 13 வயது சிறுவன் விபத்தின் போதே உடனடியாக உயிரிழந்தார். மற்ற நால்வரும் காயமடைந்தனர்.
இதில் ஒருவர் தலையில் கடுமையாக அடிபட்டுள்ளார். வாகன ஓட்டுநர் சிறுவனிற்கு செய்த மது மற்றும் போதைப்பொருள் சோதனைகளில் அவை பாவிக்கப்படவில்லை எனவே வந்துள்ளது.
காவற்துறையினர் தங்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தவில்லை என்றும், சாட்சிகளாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜோந்தாமெரியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம், இளையோர் சட்டவிரோத வாகன ஓட்டத்தில் ஈடுபடும் மோசமான விளைவுகளை மீண்டும் ஒருமுறை நம் முன்னால் எடுத்துக்காட்டுகிறது.