பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஈரானிற்கு மக்ரோன் கண்டனம்!

4 ஆடி 2025 வெள்ளி 11:20 | பார்வைகள் : 681
பிரான்சைச் சேர்ந்த செசீல் கோலர் மற்றும் ஜக்; பாரிஸ் ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது இஸ்ரேலின் புலனாய்வுத்துறை மொசாத்திற்காக உளவாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரெஞ்சு ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், இது பிரான்சுக்கு எதிரான ஒரு 'தாக்குதலாகும் செயல்' எனக் கண்டித்து, ஈரான் இந்த குற்றச்சாட்டுகளை நீக்கவில்லை என்றால் 'பழிவாங்கும் நடவடிக்கைகள்' எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

அவரது வார்த்தையில், 'இது ஒரு சித்திரவதை, ஒரு அவமதிப்பு, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு ஆக்ரோஷமான தேர்வு. அதற்கான பதில் தாமதிக்காது.'
இந்நிலையில், அவர் விரைவில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் உடன் பேசுவதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பய்ரூவின் எதிர்வினை
பிரதமர் பிரோன்சுவா பய்ரூ, இந்த நடவடிக்கையை 'பைத்தியக்காரத்தனம்' எனக் கடுமையாக விமர்சித்தார். 'இவர்கள் ஆசிரியர் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஈரானில் பெண்கள் உரிமைக்காக போராடும் மக்களுக்கு ஆதரவு காட்ட சென்றவர்கள். இவர்கள் மீது இஸ்ரேலுக்காக உளவாற்றியதாக குற்றம் சுமத்துவது எந்தத் தளத்திலும் நியாயமல்ல,' என்று பிரதம்ர் மிகவும் கோபத்துடன் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகள் மற்றும் விளைவுகள்
செசீல் கோலர் மற்றும் ஜாக்க் பாரிஸ் ஆகியோர் மீது மூன்று முக்கிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன:
மொசாத் அமைப்புக்காக உளவாற்றியது
ஈரானிய ஆட்சியை கவிழ்த்தற்கான சதி
'மண்ணை மாசடையச் செய்தல்' (corruption sur terre) எனப்படும் கடுமையான குற்றம்
இந்த மூன்றுமே ஈரானின் சட்டத்தின் கீழ் உயிர்த்தண்டனைக்குரிய குற்றச்சாட்டுகள்.
தூதரகச் சந்திப்பு மற்றும் சிறை மாற்றம்
ஜூன் 23 அன்று, ஈரானின் ஈவின் சிறை இஸ்ரேலால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 79 பேர் உயிரிழந்ததாக ஈரான் கூறுகிறது. அதன் பின்னர், சில கைதிகள் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
செசீல் மற்றும் ஜாக்க் பாரிஸ் ஆகியோர் தற்போது தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள போஸோர்க் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். ஜூலை 1ஆம் தேதி, அவர்கள் இருவரும் ஒரு பிரஞ்சு தூதரால் ஒரே நேரத்தில் சந்திக்கப்பட்டனர். இது முதல் முறையாக இருவரும் ஒரே சந்திப்பில் ஒன்றாக இருக்கச் செய்யப்பட்ட சந்திப்பு என செசீலின் சகோதரி நோயெமி கோலர் தெரிவித்தார்.
தொடரும் அழுத்தம்
பிரான்ஸ் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.
அரசு தரப்பில் பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்பதும், இருநாட்டு உறவுகளில் இது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.