40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு எடை அதிகரிப்பதற்கு காரணங்கள் என்ன?
13 ஆனி 2022 திங்கள் 14:05 | பார்வைகள் : 9729
பெண்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஹார்மோன்கள் உற்பத்தி மற்றும் செயல்பாடு ஆகியவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏதேனும் ஒரு ஹார்மோன் குளறுபடி செய்தால் கூட உடல் எடை அதிகரிக்கும். மேலும் மாதவிடாய் ஆரோக்கியம், மாதவிடாய் சுழற்சி சம்பந்தப்பட்ட ஹார்மோன்கள் சீராக இயங்கினால் பெண்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஆனால், அதே நேரத்தில் வயதாக ஆக பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் குறையத் துவங்கும் அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் பெண்களின் உடல்நிலையை பாதிக்கத் தொடங்கும். குறிப்பாக 40 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இதற்கு மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் சுழற்சி முடிவடைவதும் ஒரு காரணமாக இருந்தாலும், பொதுவாகவே 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவது என்பது மட்டுமல்லாது உடற்பயிற்சியையும் தங்கள் அன்றாட தாங்கள் செய்யும் படி வேலைகளில் இணைத்து கொள்ளவும் வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு எடை அதிகரிப்பதற்கு ஹார்மோன்கள் சுழற்சி காரணமாக கூறப்பட்டாலும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உணவு கட்டுப்பாட்டின் மூலம் எந்த வயதிலும் உடல் நலத்தை மீட்க முடியும்.
உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கும் மோசமான பழக்கங்கள்..!
குறிப்பிட்ட கால இடைவெளியில் உடலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். 40 வயது என்பது அத்தகைய ஒரு கால அளவை குறிக்கிறது. 40 வயதுக்கு பிறகு இயல்பாகவே பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் உடலின் வளர்சிதை மாற்றம் குறையத் துவங்கும், அதாவது உடலின் மெட்டபாலிக் ரேட்! எனவே உங்களுடைய வளர்சிதை மாற்றம் குறையும் பொழுது, அதிக உணவு சாப்பிட வேண்டும் அல்லது அதிக இனிப்புகள் சாப்பிட வேண்டும் போன்ற உள்ளுணர்வு ஏற்படும். இனிப்புகள் நிறைய சாப்பிடும் பொழுது அது சட்டென்று குளுக்கோஸாக மாறி உங்களுக்கு ஆற்றலைக் கொடுப்பதால் இனிப்பு சாப்பிடாமல் அல்லது மாவுச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருக்கும்போது நீங்கள் எனர்ஜியே இல்லாததுபோல இருப்பீர்கள்.
எனவே நீங்கள் அறியாமலேயே அதிகமான இனிப்பு மற்றும் மாவு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடல் எடையை கணிசமாக அதிகரிக்கிறது. எவ்வளவு சாப்பிட்டாலும், உடற்பயிற்சி மூலம் கலோரிகளை எரித்து உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்து இருந்தால் உடல் எடை பற்றி, எடை அதிகரிப்பது பற்றி கவலையே படவேண்டாம். ஃபிட்டான தோற்றத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம்.தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதும்.
உணவுப்பழக்கம் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல் :
* பாதாம், பிஸ்தா, வால்நட், சூரிய காந்தி விதைகள், உலர் பழங்கள் ஆகியவற்றை தின்பண்டமாக சாப்பிடலாம்
* புரத உணவை அதிகமாக சாப்பிட வேண்டும்
* சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகளைத் தவிருங்கள்
* சப்ஜா, சியா விதைகள், ஆளி விதைகள் ஆகியவற்றின் மூலம் உடலுக்கு நார்ச்சத்தை அதிகரியுங்கள்
* ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஏற்றவாறு, சப்ளிமென்ட்டுகளை சாப்பிடுங்கள்
* குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்குங்கள்