இன்று - ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து!!

4 ஆடி 2025 வெள்ளி 12:46 | பார்வைகள் : 1537
விமான கட்டுப்பாட்டாளர்கள் (contrôleurs) இன்று ஜூலை 4, வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை அடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இலட்சக்கணக்கான மக்கள் விடுமுறைக்காக புறப்பட தயாராக உள்ள நிலையில், இந்த விமான சேவை பாதிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வியாழக்கிழமை 933 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படவோ, வந்தடையவோ தடைகளைச் சந்தித்துள்ளன.
”விமான சேவை வேலை நிறுத்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது! விமான நிறுவனங்கள் பல மில்லியன் வருவாயை இழக்கின்றன. சுற்றுலாத்துறை பாதிக்கப்படுகிறது. பெரும் நிறுவனங்கள் முதல், வாடகை மகிழுந்து சாரதிகள் வரை அனைத்து பிரிவினரும் பாதிக்கப்படுகிறனர்” என போக்குவரத்து அமைச்சர் Philippe Tabarot இன்று வெள்ளிக்கிழமை காலை தொலைக்காட்சி ஒன்றில் பொரிந்து தள்ளியிருந்தார்.
சாள்-து-கோல் மற்றும் ஓர்லி விமான நிலையத்தில் மட்டும் ஒரு நாளில் 350,000 பயணிகள் பயணிக்கிறமை குறிப்பிடத்தக்கது.