மேக்னஸ் கார்ல்சனை 2-வது முறை தோற்கடித்த குகேஷ்....'பலவீனமான' வீரரின் பதிலடி!

5 ஆடி 2025 சனி 11:28 | பார்வைகள் : 122
பலவீனமான வீரர் என மட்டம்தட்டிய மேக்னஸ் கார்ல்சனை ஆட்டத்தில் தோற்கடித்து தக்க பதிலடி கொடுத்துள்ளார் குகேஷ்.
SuperUnited Rapid and Blitz Croatia சதுரங்க போட்டியில், இந்திய இளம் வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை பிளாக் பீஸ்களில் தோற்கடித்து சிறந்த பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக, கார்ல்சன் போட்டியின் வீரர்களைப் பற்றி பேசும்போது, "பலவீனமான வீரர்களில் ஒருவர்" என தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால், 18 வயதான குகேஷ் அந்த விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ராபிட் பிரிவில் 6வது சுற்றில் நடைபெற்ற இந்த போட்டியில், 49 நகர்வுகளுக்குப் பிறகு கார்ல்சன் சரணடைந்தார்.
கடந்த மாதம் நார்வே சதுரங்கப் போட்டியிலும் கார்ல்சனை தோற்கடித்த குகேஷ், இதன் மூலம் அவரை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வீழ்த்தியுள்ளார்.
"இது சாதாரண தோல்வி அல்ல. குகேஷ் சிறப்பாகவே விளையாடினார். இப்போது நாம் மெக்னஸின் ஆதிக்கத்தை கேள்வி எழுப்பலாம்" என கேஸ்பரோவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நாள் குகேஷுக்குப் பயிற்சி மிக்கதாக இருந்தது. முதல் சுற்றில் யான்-கிரிஸ்டொஃப் டுடாவிடம் தோல்வியடைந்தாலும், அவர் அதனை தொடர்ந்து அலிரெசா பிரூஸ்ஜா, பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சனைத் தோற்கடித்து மூன்று வெற்றிகளுடன் நாளை முடித்தார்.
குகேஷ் தற்போது 12 புள்ளிகளில் 10 புள்ளிகளுடன், ரேப்பிட் பிரிவில் முதலிடம் வகிக்கிறார்.