இலங்கையில் பேருந்துகளில் ஆசன பட்டி அணிவது குறித்து பொலிஸார் விளக்கம்

5 ஆடி 2025 சனி 17:22 | பார்வைகள் : 785
இலங்கையில் பேருந்துகளில் ஆசன பட்டி அணிவது குறித்து சில ஊடகங்களில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட வாகனம் செலுத்தும் போது சீட் பெல்ட் அணிவது ஒரு புதிய சட்டம் என்றும், நீண்ட நேரம் தொடர்ந்து ஆசன பட்டி அணிவது உடல் ரீதியான அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டி, சில ஊடகங்கள் இது தொடர்பாக பல்வேறு விடயங்களை வெளியிட்டு அவற்றை விளம்பரப்படுத்துவதை அவதானிக்க முடிந்தது.
இது ஒரு புதிய சட்டமாக வெளியிடப்படவில்லை என்றும், 2011 ஓகஸ்ட் 9ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 1718/12 என்ற இலக்கத்தைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, வாகனம் செலுத்தும் போது சாரதி ஆசன பட்டி அணிவது கட்டாயம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1981 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் பிரிவு 169 இன் படி, சாரதி ஒருவர் தொடர்ந்து 4 மணி 30 நிமிடங்கள் வரை வாகனத்தை செலுத்துவார் எனில், 30 நிமிட ஓய்வு நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், ஒரு சாரதி 24 மணி நேரத்திற்குள் 10 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
நாட்டில் வீதி விபத்துக்களால் நாளாந்தம் பதிவாகும் உயிரிழப்புகள் மற்றும் பிற விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், ஆசன பட்டி அணிவது தொடர்பான சட்டம் குறித்து சாரதிகள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதற்கமைய, சாரதிகள் வாகன செலுத்தும் போது மேற்குறிப்பிட்ட சட்ட நிபந்தனைகள் குறித்து அவதானம் செலுத்துமாறும், பரிந்துரைக்கப்பட்டவாறு ஆசன பட்டிகளை அணிதல், ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சாரதியாக செயல்படவும், தினமும் பதிவாகும் உயிரிழப்புகள் மற்றும் ஏனைய வீதி விபத்துகளைக் குறைக்க பங்களிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளதோடு, சில ஊடகங்கள் மூலம் இது தொடர்பான தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.