Paristamil Navigation Paristamil advert login

தலையில் ஏன் எண்ணெய் தடவ வேண்டும்?

தலையில் ஏன் எண்ணெய் தடவ வேண்டும்?

25 வைகாசி 2022 புதன் 13:07 | பார்வைகள் : 11727


 இன்றைய இளம் தலைமுறையினர் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. ‘தலையில் எண்ணெய் தடவினால் முகம் பளிச்சென்று பிரகாசமாக தெரியாது. எண்ணெய் பிசுக்கு முகத்தில் வழிந்தோடும். புத்துணர்ச்சியை உணர முடியாது’ என அடுக்கடுக்கான காரணங்களை அடுக்குவார்கள்.

 
தலையில் எண்ணெய் தடவுவதால் தோற்றத்தில் மாறுபாட்டை உணர்ந்தாலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். தலைமுடி பிரச்சினையால் பலரும் கவலைப்படுகிறார்கள். முடி உதிர்வுக்கு அதன் வேர் கால்கள் வலிமை இல்லாமல் இருப்பதுதான் முதன்மை காரணமாக அமைந்திருக்கிறது. தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யும்போது வேர்கள் எண்ணெய்யை நன்கு உறிஞ்சிக்கொள்ளும். மேலும் மசாஜ் செய்யும் வழக்கத்தை பின் தொடரும்போது ரத்த ஓட்டம் சீராகி முடியின் ஆரோக்கியம் மேம்படும். இதனால் முடியின் வேர் கால்கள் வலிமை அடைந்து முடி உதிர்வது குறைந்துவிடும்.
 
பொடுகு தொல்லை, பேன் தொல்லை, முடி வறட்சி அடைதல், முடி உடைதல் என தலைமுடியை பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. தலைக்கு முறையாக எண்ணெய் தடவி பராமரிப்பதுதான் இதற்கு ஒரே தீர்வாக அமையும். தலைக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்வது வேர்களுக்கு ஊட்டமளித்து முடியை உறுதியாக்கும்.
 
பொடுகு தொல்லையும் நீங்கிவிடும். ஏனெனில் பொடுகு தொல்லைக்கு முக்கிய காரணம் தலை முடி வறட்சியாக இருப்பதுதான். அதற்கு தலையில் எண்ணெய் வைக்காததுதான் முக்கிய காரணமாகும். தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு கால் மணி நேரம் கழித்து குளிக்கலாம். அப்போது சீயக்காய் பயன்படுத்துவது நல்லது.
 
குளித்து முடித்ததும் தலை முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மின்னுவதை காணலாம். காலை பொழுதில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க விரும்பாதவர்கள் இரவில் தூங்க செல்லும்போது தலைக்கு எண்ணெய் தேய்க்கலாம். காலையில் எழுந்ததும் குளித்துவிடலாம். அப்படி செய்வது தலையில் எண்ணெய் பிசுக்கு இருப்பது போல் தோன்றாது. எண்ணெய் வழிந்து முகத்திலும் படராது.
 
இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் ஹேர் கண்டிஷனர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவை மாய்ஸ்சுரைசர் போல் செயல்பட்டு தலைமுடிக்கு பளபளப்பை அளிக்கின்றன. சிக்கு விழாத கூந்தலை பெறவும் உதவுகின்றன. ஆனால் தலைமுடிக்கு சிறந்த இயற்கை மாய்ஸ்சுரைசர் எண்ணெய்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்