கர்ப்ப காலத்தில் அதிக நேரம் தூங்கிக்கொண்டே இருப்பதும்... ஓய்வு எடுப்பதும் ஆபத்தா..?
9 சித்திரை 2022 சனி 16:01 | பார்வைகள் : 8695
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவது இயல்பான ஒன்று தான். இதனால், பல பெண்கள் அவ்வபோது ஓய்வெடுத்துக் கொள்வார்கள். குறிப்பாக, கர்ப்ப காலத்தில் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரையில் ஆழ்ந்த உறக்கம் கொள்வது தாய்க்கும், குழந்தைக்கும் நன்மை பயக்கும் விஷயம் ஆகும். அதே சமயம், சிலருக்கு தூக்கமின்மை தொந்தரவு ஏற்படக் கூடும். இது கர்ப்பம் பலவீனமாக இருப்பதற்கான அறிகுறி ஆகும். இதன் விளைவாக குழந்தை வளர்ச்சி தடைபடலாம், முன்கூட்டியே குழந்தை பிறக்கலாம்.
என்னதான் கர்ப்ப காலத்தில் ஓய்வு அவசியமானது என்றாலும் கூட, அதற்கும் ஓர் எல்லை உண்டு. மிக அதிகமான நேரம் நீங்கள் தூங்கி கொண்டிருந்தால் அல்லது சோர்ந்து படுத்திருந்தால், அது குழந்தையின் நலனை பாதிக்கும். குறிப்பாக, 9 மணி நேரத்திற்கு மேலாக நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தால் அது நல்லதல்ல.
கர்ப்ப காலத்தில் அதிக தூக்கத்திற்கு காரணம் என்ன? குழந்தையின் வளர்ச்சியின் எதிரொலியாக வயிறு பெரியதாக மாறும்போது, உடல் ரீதியாக ஏற்படும் அசௌகரியம் மற்றும் ஸ்ட்ரெஸ் ஆகியவை தூக்கத்திற்கு காரணம் ஆகும். இது மட்டுமல்லாமல், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் தூக்கம் அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை குறைவதால் மயக்க உணர்வு ஏற்படும். இதனால், தூங்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும்.
இரைப்பை உணவுக் குழாய் எதுக்களித்தல் பாதிப்பு : Gastroesophageal Reflux disease (GERD) என்று சொல்லக் கூடிய, இரைப்பையில் இருந்து உணவுக் குழாய்க்கு உணவு எதுக்களித்து வரும் பாதிப்பு கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படக் கூடும். உணவுக் குழாய் அடியில், உணவை இரைப்பைக்குள் அனுமதிக்கும் சுறுக்கு தசை சற்று தளர்வாக உள்ள பெண்களுக்கு ஏற்படக் கூடிய பொதுவான பிரச்சினை இதுவாகும். இதனால், தொண்டை வரையில் உணவு எதுக்களித்து வரும். இதனால், சிலருக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்காது.
அப்னீயா தூக்கம் : பெண்கள் தூங்கும் போது, அவ்வபோது மூச்சுக்காற்று நின்று, இடைவெளி விட்டு தொடங்கும். தூங்கும் போது கர்ப்பிணி பெண் குறட்டை விட்டாலோ அல்லது முழு இரவு தூங்கிய பிறகும் சோர்வாக இருந்தாலோ அவர்களுக்கு அப்னீயா தூக்க பாதிப்பு இருக்கக் கூடும். இந்தப் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
அவ்வபோது சிறுநீர் கழிப்பது : கர்ப்ப காலத்தின் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இரவில் இது அடிக்கடி நிகழும்போது தூக்கம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. குழந்தை வளர்ச்சி அடையும்போது, கர்ப்பப்பை என்பது சிறுநீர் பையின் மீது அழுத்தத்தை கொடுக்கும். இதனால், சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு அடிக்கடி தோன்றும்.
தூக்கத்தை அதிகரிப்பதற்கான டிப்ஸ் : கர்ப்ப காலத்தில் சுமார் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியமானது என்ற வகையில், வாழ்வியல் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலமாக இதை சாத்தியமாக்கலாம். மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் உற்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் மூலமாக ஹைப்பர்டென்ஷன் மற்றும் கெஸ்டேஷனல் டயபடீஸ் போன்ற பிரச்சினைகள் குறையும் என்பதோடு, ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
கர்ப்ப காலத்தில் மனக்கவலை இருக்கக் கூடாது. இதைப் போக்குவதற்கு மியூஸிக் கேட்பது, புத்தகங்களை வாசிப்பது போன்ற பழக்க வழக்கங்களை அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதன் எதிரொலியாக ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.