30 வீத தீர்வை வரியை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி - நெருக்கடியில் இலங்கை

10 ஆடி 2025 வியாழன் 13:17 | பார்வைகள் : 175
இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத பரஸ்பர தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெள்ளை மாளிகையால் அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துவிதமான பொருட்களுக்கும் 30 வீத தீர்வை வரி அறிவிடப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க ஜனாதிபதியால் இலங்கை மீது 44 வீத தீர்வை வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நாடுகளிடையே நிலவிய சமநிலையற்ற வர்த்தகத்தை சீர்ப்படுத்தும் நோக்கில் தீர்வை வரிகளை அறிவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
பின்னர் பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தமையால் அது 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையுடன் நியாயமான மற்றும் பரஸ்பர வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு உறுதியளிப்பதாக வௌ்ளை மாளிகை வௌியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வர்த்தகக் குறைபாடுகள் நிலவுகின்ற போதிலும், புதிய கொள்கைகளின் ஊடாக இலங்கையுடன் தொடர்ந்தும் பொருளாதார தொடர்புகளை பேணுவதற்கும் அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வரி மற்றும் வரியற்ற கொள்கைகளே பொருளாதார சமநிலையற்ற தன்மைக்கு காரணமாகுமெனவும் அமெரிக்க ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே 30 வீத தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக சில பொருட்களுக்கான துறைசார் வரிகள் தொடர்ந்து அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கு இலங்கை நிறுவனங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தீர்வை வரியிலிருந்து விலக்களிப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையால் அமெரிக்காவிற்கான தீர்வை வரி அதிகரிக்கப்பட்டால், அறிவிக்கப்பட்ட வரி வீதம் மேலும் அதிகரிக்கப்படுமெனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏனைய சில ஆசிய நாடுகளுக்கும் அமெரிக்காவினால் பரஸ்பர தீர்வை வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.