Paristamil Navigation Paristamil advert login

வீட்டுக்கே ரேஷன் பொருட்கள் வினியோகம்: ஆக.15ல் முதல்வர் துவக்கம்

வீட்டுக்கே ரேஷன் பொருட்கள் வினியோகம்: ஆக.15ல் முதல்வர் துவக்கம்

11 ஆடி 2025 வெள்ளி 11:35 | பார்வைகள் : 155


வீட்டுக்கே ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டத்தின் சோதனை முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழகம் முழுதும் 16 லட்சம் வீடுகளுக்கு, 'டோர் டெலிவரி' செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 15ல் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதந்தோறும் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. இவற்றின் வினியோகத்தில் முறைகேட்டை தடுக்க, கார்டில் உள்ள உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ரேஷன் கடைக்கு வந்து, விற்பனை முனைய கருவியில் கைரேகையை பதிவு செய்தால் தான், ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

மூத்த குடிமக்கள், நடக்க முடியாதவர்கள் மட்டும் வேறு நபரை அனுப்பி பொருட்கள் வாங்கலாம். இதற்கு, உணவு வழங்கல் துறை அலுவலகங்களில் அங்கீகார சான்று படிவத்தை பூர்த்தி செய்து, ஒப்புதல் பெற வேண்டும். உறவினர்கள் இல்லாதவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, ரேஷன் ஊழியர்கள் வாயிலாக உணவு பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டம், சோதனை ரீதியாக சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, கடலுார் ஆகிய மாவட்டங்களில் தலா, 10 ரேஷன் கடைகளில் இம்மாதம் 1 முதல் 5ம் தேதி வரை செயல்படுத்தப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு கடையிலும் தலா, 70 கார்டுதாரர்களின் வீடுகளுக்கே, வேனில் ரேஷன் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன.

இதற்கு, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.சோதனை முயற்சி வெற்றி பெற்றதை அடுத்து, மாநிலம் முழுதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆக., 15ல் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இத்திட்டத்திற்காக மாநிலம் முழுதும், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய 16 லட்சம் கார்டுதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இக்கார்டுதாரர்களின் குடும்பத்தில், 21 லட்சம் பயனாளிகள் உள்ளனர்.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேனில் ரேஷன் பொருட்களுடன், எடை போடும் கருவி, விற்பனை முனைய கருவி ஆகியவற்றை கார்டுதாரர்களின் வீட்டிற்கே எடுத்து சென்று, எடை போட்டு வழங்கப்பட்டன. இதனால், சிரமமின்றி பொருட்களை பெற முடிந்தது.

ஒருவருக்கு வழங்க, 5 முதல் 7 நிமிடம் ஆனது. வீடுகளில் ஆட்கள் இல்லாதது, முகவரி மாறி இருப்பது உள்ளிட்ட விபரங்கள் கண்டறியப்பட்டன. எனவே, திட்டம் துவங்கியதும், கார்டுதாரர் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே மொபைல் போன் எண்ணில் தகவல் தெரிவிக்கப்படும்.

டோர் டெலிவரி திட்டத்தில், அனைத்து வகை கார்டுகளிலும் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் மொத்தம் 2.25 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்