ஐரோப்பாவில் வெப்ப அலை - 10 நாட்களில் 2,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

11 ஆடி 2025 வெள்ளி 15:49 | பார்வைகள் : 226
ஐரோப்பாவில் வெப்ப அலையால் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
கடந்த மாதம் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத கடும் அனல் காற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் முதல் சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் வரையிலான நாடுகள் இயல்பை விட மிக அதிகமான வெப்பநிலையை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் பெரும் இடையூறுகளும், துரதிர்ஷ்டவசமான உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
பல முக்கிய நகரங்களில் வெப்பநிலை மிக அதிக உச்சத்தை எட்டியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 105 டிகிரி பாரன்ஹீட் (40.6 டிகிரி செல்சியஸ்) வெப்பம் சுட்டெரித்தது. ஸ்பெயினில் 106 டிகிரி பாரன்ஹீட் (41.1 டிகிரி செல்சியஸ்) வெப்பம் வாட்டி வதைத்தது.
அதிர்ச்சியளிக்கும் விதமாக, போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் அருகே உள்ள மோரா நகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 138 டிகிரி பாரன்ஹீட் (58.9 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது ஐரோப்பாவில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.
இந்த மோசமான சூழ்நிலையை சமாளிக்க, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அவசரகால நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரான்சின் மெட்டியோ மற்றும் ஜெர்மனியின் முனிச் போன்ற நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக ஜேர்மனியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் பல ஏக்கர் விளைநிலங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட ஐரோப்பா ஏற்கனவே சுமார் 0.3 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலை சந்தித்துள்ளது என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இது தற்போது நிலவும் தீவிர வானிலை மாற்றங்களை மேலும் மோசமாக்குகிறது.
புவி வெப்பமயமாதல், அதிகரித்து வரும் தொழில்மயமாக்கல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவை வெப்ப அலைகள் தீவிரமடைவதற்கு முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் 2,300-க்கும் மேற்பட்டோர் அனல் காற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.