வனிதாவிற்கு அடல்ட் காமெடி கைகொடுத்ததா?

11 ஆடி 2025 வெள்ளி 17:10 | பார்வைகள் : 508
விஜயகுமாரின் மகளான வனிதா, 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஹீரோயினாக நடித்துள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். அவர் கடைசியாக 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த விஜய்யின் சந்திரலேகா படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பின்னர் தற்போது தான் மீண்டும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளது மட்டுமின்றி இயக்கியும், இருக்கிறார் வனிதா. இப்படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் நடித்துள்ளார். இப்படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தான் தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி ஷகீலாவின் மகளான வனிதா, ராபர்ட்டை திருமணம் செய்துகொள்கிறார். இதில் ராபர்ட் குழந்தையே பெற்றுக் கொள்ள வேண்டாம் என்கிற முடிவில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் வாழ்க்கையே வேஸ்ட் என்று வனிதாவை தோழிகள் சிலர் தூண்டிவிடுகிறார்கள். இதனால் 40 வயதில் தனக்கு குழந்தை வேண்டும் என்று அடம்பிடிக்கிறார் வனிதா. அவரது கணவர் ராபர்ட் வேண்டவே வேண்டாம் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இதனால் இவர்கள் இருவரிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். ராபர்ட் ஏன் தனக்கு குழந்தை வேண்டாம் என்கிறார். வனிதாவும் ராபர்ட்டும் மீண்டும் சேர்ந்தார்களா? அவர்களுக்கு குழந்தை பிறந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
வனிதா விஜயகுமார் தான் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஒரு பெண்களின் உளவியலை மிகவும் எதார்த்தமான புரிதலோடு கையாண்டிருக்கிறார் வனிதா. சில துணிச்சலான விஷயங்களையும் அடல்ட் காமெடி ஜானரில் சற்று ஹ்யூமராக ட்ரை பண்ணி இருக்கிறார். இப்படத்தை பெரும்பாலும் பாங்காக்கில் தான் எடுத்துள்ளார்கள். அதனால் அங்குள்ள கலாச்சாரம், அவர்கள் அணியும் உடை என ஒரு புதுவிதமான கதையுலகத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கொரியன் டிராமா பார்க்கும் அனுபவத்தை இந்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் ஏற்படுத்துகிறது.
கதை சற்று வித்தியாசமானதாக இருந்தாலும் திரைக்கதையில் கோட்டைவிட்டிருக்கிறார் வனிதா. குறிப்பாக படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களின் கேரக்டர் ஸ்ட்ராங் ஆனதாக இல்லாதது ஏமாற்றமே. ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை சற்று கைகொடுத்திருக்கிறது. குறிப்பாக சிவராத்திரி பாடல் கிளுகிளுப்பை ஏற்படுத்தும். ஒளிப்பதிவு, எடிட்டிங் என தொழில் நுட்ப ரீதியாகவும் இப்படத்தில் கோட்டை விட்டிருக்கிறார் வனிதா விஜயகுமார். ஆர்த்தி, ஷகீலா, கிரண் ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த ரோலை கச்சிதமாக செய்துள்ளனர். திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் இந்த மிஸஸ் அண்ட் மிஸ்டரை கொண்டாடி இருக்கலாம்.