பெண்களுக்கு இந்த பகுதியில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்து...
9 பங்குனி 2022 புதன் 09:27 | பார்வைகள் : 9619
மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு வயிற்றைவிட காலில் அதிக கொழுப்பு இருப்பது ஒப்பீட்டளவில் இதயம் சார்ந்த பாதிப்புகளை குறைந்தளவில் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
'ஆப்பிள் போன்ற உடலமைப்பை கொண்ட பெண்கள்' தொப்பையை குறைக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தொப்பையை கொண்ட பெண்களுக்கும், பக்கவாதம் அல்லது இதயப் பிரச்சனைக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிவதற்கு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சரியான உடல் எடை, அதாவது 18 முதல் 25க்கு உட்பட்ட உடல் நிறை குறியீட்டு எண் கொண்ட 18 வயதுக்கு அதிகமான 2,600 பெண்களின் உடல் நலன் இந்த ஆராய்ச்சிக்காக கண்காணிக்கப்பட்டது.
1990களின் மத்திய பகுதியில், 'வுமன் ஹெல்த் இனிஷியேடிவ்' என்ற பெயரில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் கொழுப்பு, தசை மற்றும் எலும்பு அடர்த்தி குறிப்பிட்ட இடைவெளிகளில் பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஆராய்ச்சியின் முடிவில், இடுப்பு மற்றும் தொடையில் கொழுப்பு கொண்ட பெண்களைவிட, தொப்பை கொண்ட பெண்கள் அதிகளவில் இதயம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
உள்ளுறுப்பு கொழுப்பு எனப்படும் வயிற்று பகுதியை சுற்றி சேகரமாகும் கொழுப்பு, இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற வளர்சிதை மாற்ற சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது ஏற்கனவே ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகும்.
கால் பகுதிகளில் சேகரமாகியுள்ள கொழுப்பு ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருப்பதற்கான காரணம் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை என்றும், அதே சமயத்தில் இது உடலில் வேறு எங்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
30 வயதிற்கு மேல் பெண்களின் வாழ்க்கைப்போக்கில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றமே வயிற்றுப்பகுதியில் கொழுப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கால் பகுதியில் உள்ள கொழுப்பைவிட, வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை குறைப்பதற்கு பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பேராசிரியர் சீ கூறுகிறார்.
"வயிற்றுப் பகுதியில் குவிந்துள்ள கொழுப்பை இடமாற்றம் செய்வதற்கு உதவும் குறிப்பிட்ட உணவுமுறை இருக்கிறதா என்பதில் இன்னும் தெளிவில்லை. இதற்கான பதிலை நாங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கும் வரை, பெண்கள் ஆரோக்கியமான உணவு உட்கொள்வதுடன் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முயற்சிக்கலாம்," என்று அவர் மேலும் கூறுகிறார்.