நாசாவில் உயர்பொறுப்பில் உள்ளவர்களுக்கு அபாயம்...? ட்ரம்ப் அரசின் முடிவு

12 ஆடி 2025 சனி 06:33 | பார்வைகள் : 252
அமெரிக்காவின் நாசாவில் பணிபுரியும் 2000க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானதைத் தொடர்ந்து, அரசின் செலவீனங்களைக் குறைக்கும் வகையில் DOGE என்ற அமைப்பை உருவாக்கினார்.
அதற்கு தலைவராக எலோன் மஸ்கை நியமிக்க, கடந்த சில வாரங்களாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் மஸ்க் பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்த சூழலில் ட்ரம்ப் அரசு செலவினங்களை குறைக்க நாசா பக்கம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, விண்வெளி மையமான நாசாவில் செலவினத்தை 6 பில்லியன் டொலர்கள் வரை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக நாசாவில் பணியாற்றி வரும் உயர்பொறுப்பு ஊழியர்கள் 2,145 பேரை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் அரசு முடிவெடுத்துள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த தகவல்களால், அமெரிக்காவின் எதிர்கால ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளைக் கடுமையாகப் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது.
மேலும், மனிதர்களை 2026ஆம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பும் நாசாவின் பணி இதனால் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்திற்கு முன்னதாகவே பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.