திருமலா பால் நிறுவன அதிகாரி சந்தேக மரணம்; துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை

12 ஆடி 2025 சனி 05:50 | பார்வைகள் : 156
திருமலா பால் நிறுவனத்தில், 45 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட, கருவூல மேலாளர் நவீன் பொலினேனி சந்தேக மரணம் தொடர்பாக, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ரூ.44 கோடி கையாடல்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி, 37. இவர், சென்னை மாதவரத்தில் தங்கி, பொன்னியம்மன்மேடில் உள்ள, திருமலா பால் நிறுவனத்தில், நிதிப்பிரிவு கருவூல மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிறுவனத்தில், 44.50 கோடி ரூபாய் கையாடல் செய்துவிட்டதாக, நவீன் பொலினேனியிடம், திருமலா பால் நிறுவனத்தார் விசாரித்து உள்ளனர். பணம் கையாடல் குறித்து, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜனிடமும் புகார் அளித்துள்ளனர்.
அதேபோல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப் பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், புழல் பிரிட்டானியா நகரில், நவீன் பொலினேனி வீடு கட்டி வரும் இடத்தில் உள்ள குடிசையில், துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். ஆனால், இவரின் கைகள் பின் பக்கம் கட்டப்பட்டு இருந்தன.
உயரத்தை தாவி பிடிக்க அங்கு வாய்ப்பு இல்லை. டேபிள் உள்ளிட்ட பொருட்களும் இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி துாக்கிட்டு கொண்டார் என, சந்தேகம் எழுகிறது. இதனால், புழல் போலீசார் சந்தேக மரணம் என்றே வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவ இடம் அருகே உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அங்கு நவீன் பொலினேனி மட்டும், காரில் இருந்து இறங்குவது பதிவாகி உள்ளது. இவர் தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார் என, போலீசார் முடிவுக்கு வந்து உள்ளனர். எனினும், நவீன் பொலினேனியிடம் கையாடல் தொகையில் பங்கு கேட்டு மிரட்டிய, திருமலா பால் நிறுவன அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடக்கிறது. இந் நிலையில், நவீன் பொலினேனி மீது, திருமலா பால் நிறுவனத்தார் அளித்த புகார் மீது, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜன், விதிகளை மீறி விசாரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
வழக்கு பதியவில்லை
இதுதொடர்பாக, பாண்டியராஜனிடம், போலீஸ் கமிஷனர் அருண், நேற்று விசாரணை நடத்தினார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து, கமிஷனர் அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதுவரை, கொளத்துார் துணை கமிஷனருக்கான பணிகளை கவனிக்க வேண்டாம் எனவும், அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நவீன் பொலினேனி மீது, திருமலா பால் நிறுவனத்தார் அளித்த புகார் மீது முறையாக வழக்குப்பதிந்து விசாரிக்காத, மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.