உடலுக்கு இஞ்சி நல்லதா இல்லை சுக்கு நல்லதா?.
8 பங்குனி 2022 செவ்வாய் 15:15 | பார்வைகள் : 9144
சமையலில் சேர்ப்பதற்கு விதவிதமான சமையல் பொருட்களை வாங்கி அடுக்கி வைத்தால் மட்டும் போதாது. அதை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அஞ்சறை பெட்டியில் இருக்கிறது என்பதற்காக அனைத்தையும் அள்ளிப்போட்டால், சமையல் ருசிக்காது, ஆரோக்கியமானதாகவும் இருக்காது.
நமது முன்னோர்களின் காலத்தைப் பொறுத்தவரை உணவே மருந்து என வாழ்ந்தார்கள், அதனால் உணவில் சேர்க்கப்படும் அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள் மட்டுமின்றி மசாலா பொருட்களில் கூட மருத்துவ குணம் நிறைந்திருக்கும் படி பார்த்துக்கொண்டார்கள். தற்போதைய பாஸ்புட் காலத்தில் நின்று நிதானமாக சமைக்க நேரம் கிடையாது. அப்படி சமைத்தாலும், சில சமயங்களில் சில பொருட்களை எப்போது, எப்படி பயன்படுத்துவது என்பதில் குழப்பம் ஏற்படுவது உண்டு.
உதாரணத்திற்கு இஞ்சி மற்று சுக்கு இரண்டையும் எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் எப்போதுமே குழப்பம் உருவாகும். நன்கு உலர்த்தப்பட்ட இஞ்சியை தான் சுக்கு என அழைக்கிறோம். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு விஷயங்களுக்குப் பயன்படக்கூடியவை. எனவே இஞ்சி மற்றும் சுக்கு இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் மற்றும் பயன்பாடு குறித்து ஆயுர்வேத பயிற்சியாளரான நிதி ஷேத்தின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சில பயனுள்ள குறிப்புகள் உங்களுக்காக...
ஈரப்பதம் மிக்க இஞ்சியை எடுத்துக்கொண்டால் நாள் முழுக்க உற்சாகமாக உணருவீர்கள். எப்போதெல்லாம் இஞ்சியை பயன்படுத்தினால் பலன் கொடுக்கும் என அறிந்துகொள்ளலாம்.
உங்கள் சுறுசுறுப்பை மேம்படுத்தவும், வியர்வையை வெளியேற்றவும் சரியான நேரத்தில் இஞ்சி உங்களுக்கு கைகொடுக்கும்.
மாதவிடாய் தசை பிடிப்புகளுக்கு தோல் நீக்கிய இஞ்சியை பயன்படுத்தி சூடான இஞ்சி தேநீர் குடிக்கலாம்.
வயிறு கோளாறு, வயிறு உப்புசம், வாய்வு தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி அருமையான நிவாரணம் அளிக்கும்.
உடலும், மனதும் சோர்வாக இருக்கும் போது இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் புத்துணர்ச்சி தானாக வரும்.
சுக்கு:
நன்றாக உலர வைக்கப்பட்ட இஞ்சியை சுக்கு என அழைக்கிறோம். சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்பது பழமொழி, இதனை அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டால் சளி, இருமல், காய்ச்சல், வாயுத்தொந்தரவு போன்ற பல பிரச்சனைகளுக்கு பலன் கொடுக்கும். இதனை எப்போது பயன்படுத்த வேண்டும் என அறிந்து கொள்ளுங்கள்.
மந்தமான செரிமானம்
உடலில் சளி பிரச்சனைகள் அடிக்கடி தோன்றுவது அல்லது தீவிரமாக இருப்பது
கீல்வாதம் போன்ற தீவரமான அழற்சி நிலைகளுக்கு தீர்வு வழங்கும்
இஞ்சியை விட சுக்கு சிறந்ததா?
*இஞ்சியுடன் ஒப்பிடும்போது சுக்கை ஜீரணிப்பது எளிதானது.
* இஞ்சியை விட சுக்கிற்கு இயற்கையாகவே குடலை பிணைக்கும் தன்மையுள்ளது.
* சுக்கு உடலில் சூட்டை உண்டாக்கவும், சளியை குணப்படுத்தவும் நல்ல மருந்தாக செயல்படுகிறது.
*உலர்ந்த இஞ்சியான சுக்கை மசாலாப் பொருளாகவோ மருந்தாகவோ அனைத்து பருவங்களிலும் பயன்படுத்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து, அரை தேக்கரண்டி உலர்ந்த இஞ்சியைச் சேர்த்து, அதை 750 மில்லியாகக் குறையும் வரை நன்றாககொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை குளிர்காலத்தில் நாள் முழுவதும் பருவது பருவ கால நோய்களை விரட்ட உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.