Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவை பாக்., தாக்கியதற்கு ஆதாரம் உண்டா? அஜித் தோவல் ஆவேசம்

இந்தியாவை பாக்., தாக்கியதற்கு ஆதாரம் உண்டா? அஜித் தோவல் ஆவேசம்

12 ஆடி 2025 சனி 07:50 | பார்வைகள் : 156


பாகிஸ்தான் மீதான போர் தொடர்பான உண்மைகளை, மேற்கத்திய ஊடகங்கள் தவறாக காட்டுகின்றன. இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரத்தை அவர்களால் காட்ட முடியுமா,” என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கேள்வி எழுப்பினார்.

சென்னை ஐ.ஐ.டி., உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின், 62வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளைச் சேர்ந்த, 3,227 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

பின், அஜித் தோவல் பேசியதாவது:

நாம், 1,000 ஆண்டுகள் பழமையான நாகரிகம் கொண்டவர்கள் என்பதை, மனதில் வைத்து கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியின்போது, நம் நாட்டின் உரிமைகள் அடிமையாக்கப்பட்டு இருந்தன. அடுத்த 22 ஆண்டுகளில், நாம் சுதந்திர தின நுாற்றாண்டை கொண்டாடுவோம். அப்போது, சமூக பொறுப்புகளையும் உணர்ந்து, நம் நாட்டுக்கு உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.

நம் நாடு பல துறைகளில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. ராணுவத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில் சக்திவாய்ந்த பொருளாதார நாடாக, நாம் மாறுவோம். 110 கோடி பேர் வேலைக்கு செல்வோராக இருப்பர். பாதுகாப்புத் துறை, உற்பத்தி, சமூக பொருளாதார முன்னேற்றம் என, அனைத்து துறைகளிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோராக, நீங்கள் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

நம் நாட்டிற்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் கணிசமாக தேவைப்படுகிறது. உலகில் எங்கு பணிபுரிந்தாலும், நீங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி படைப்புகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்.

மற்ற நாடுகள் உதவி இல்லாமல், '5ஜி' தொழில்நுட்பத்தை மேற்கொள்ள முடிவு செய்தோம். சீனா பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, 5ஜி 'நெட்வொர்க்கை' மேம்படுத்தியது. நாம் இரண்டரை ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து விட்டோம்.

நம் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களின் பங்களிப்பை நினைத்து பெருமைப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஒவ்வொரு ஆண்டும் மாற்றத்தை ஏற்படுத்தும். 'ஆப்பரேஷன் சிந்துார்' போரில், நாம் ஒன்பது தீவிரவாத இலக்குகளை சரியாக தாக்கினோம். இதில், எந்த இலக்கும் எல்லையில் இல்லை. தொலைதுாரத்தில் இருந்த இலக்கையும் குறிவைத்து தாக்கினோம்.

இந்த தாக்குதல் துவங்கிய 23 நிமிடங்களில், மொத்த ஆப்பரேஷனும் முடிந்து விட்டது. அதனால், நம் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் உண்மைகளை தவறாகவே காட்டுகின்றன.

நீண்ட போராட்டங்களை, ஒரு வரியில் ஒழுங்குபடுத்த முயல்கின்றன. நாம் காட்டிய பொறுமையையும், தவிர்க்கப்பட்ட பதில்களையும், அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் காட்டும் காட்சிகள், அவர்களுக்கேற்ற ஒரு கட்டமைப்புக்குள் பொருந்தும்படி வடிவமைக்கப்படுகின்றன.

இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள், அதற்கு சான்றாக ஏதாவது ஒரு புகைப்படத்தை காட்ட முடியுமா? பாகிஸ்தானால், இந்தியாவில் ஒரு கண்ணாடியை கூட உடைக்க முடியவில்லை.

நம் எல்லையில் என்ன நடந்தது, நாம் எத்தனை முறை எதிரி நாட்டை எச்சரித்தோம் என்பது பற்றி இவர்கள் தெரியப்படுத்துவதில்லை. பதிலடி கொடுப்பது எளிது; பொறுமையை கடைப்பிடிப்பது தான் வீரம்.

நாம் ஒரு நாடாக இருக்கிறோம் என்பதற்கான உண்மையான அடையாளம், நம் நாகரிக ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், சில நேரங்களில் நம்மை மீறி வரும் அழுத்தங்களுக்கு மத்தியில் கூட, கைவிடாமல் இருப்பது தான். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், ஐ.ஐ.டி., நிர்வாக குழு தலைவர் பவன் கோயங்கா, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்